search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயில் - கார் மூலம் கோவையில் இருந்து கடத்திய ரூ.5½ கோடி கருப்பு பணம் சிக்கியது
    X

    ரெயில் - கார் மூலம் கோவையில் இருந்து கடத்திய ரூ.5½ கோடி கருப்பு பணம் சிக்கியது

    ரெயில் மற்றும் கார் மூலம் கோவையில் இருந்து கடத்திய ரூ.5½ கோடி கருப்பு பணத்தை போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக 4 பேரை கைது செய்துள்ளனர்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கருவாரம்குன்னு பகுதியில் போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி ஒரு கார் வந்தது. அதனை தடுத்து நிறுத்தினர். அதில் 2 வாலிபர்கள் இருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர்.

    சந்தேகம் அடைந்த போலீசார் காரை சோதனை செய்தபோது அதில் ரூ.500, ரூ.2000 மற்றும் ரூ.100 நோட்டுகள் ரூ. 1½ கோடி இருந்தன. இது குறித்து வாலிபர்களிடம் கேட்டபோது கோவையில் இருந்து கொண்டு வரப்பட்டதாக கூறினர். பணத்திற்கு உரிய ஆவணங்கள் ஏதுவும் இல்லை.

    இதனையடுத்து பணம்- காரை பறிமுதல் செய்த போலீசார் வாலிபர்களை கைது செய்தனர். அவர்களின் பெயர் விபரங்கள் உடனே வெளியிட முடியாது என்று கருவாரம்குன்னு போலீசார் தெரிவித்தனர்.

    அதே நேரத்தில் கோழிக்கோடு தலைச்சேரி ரெயில் நிலையத்தில் போலீசார் மற்றும் ரெயில்வே போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூரில் இருந்து யஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் வந்தது. அதில் இருந்து 2 வாலிபர்கள் சூட்கேசுடன் இறங்கினர். சந்தேகப்படும்படி இருந்த அவர்களை போலீசார் பிடித்தனர்.

    அவர்களும் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் வைத்திருந்த சூட்கேசை திறந்து பார்த்தனர். அதில் ரூ.4 கோடி பணம் இருந்தது. விசாரணையில் அவர்கள் கூடலூர் அருகே உள்ள கொடுவல்லியை சேர்ந்த இக்பால் (வயது 30), முகமது சலிக் (25) என்பது தெரியவந்தது.

    இதில் முகமது சலிக் துபாயில் வேலை செய்து வருகிறார். இக்பால் இதே பகுதியில் வியாபாரம் செய்து வருகிறார். பணம் குறித்து அவர்கள் கூறும்போது,

    கொடுவால்லியில் இருந்து தங்கம் கடத்திச்சென்று பெங்களூருவில் விற்று பணமாக மாற்றி வருகிறோம் என்றனர். ஆனால் போலீசார் இதனை நம்பவில்லை. வாலிபர்களை சர்க்கிள் இன்ஸ்பெக்டர் பிரேமசந்திரன் கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்துச்சென்றார். அப்போது அவர் கூறும்போது,

    வாலிபர்கள் கடத்தி வந்த பணம் கோவையில் இருந்து கடத்திவரப்பட்டதாக இருக்கும் என்றே சந்தேகப்படுகிறோம். பிடிபட்ட பணம் நல்ல நோட்டா என்பது குறித்து வங்கிக்கு இன்று காலை கொண்டு செல்கிறோம்.அங்கு வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்து அது கருப்பு பணமா? என்று கூறுவார்கள் என்றார்.

    கேரளா- கூடலூர் இடையே உள்ள கொடுவாலி ஒரு சிறிய நகரம். கேரளாவில் எந்த ஒரு பகுதியிலும் பணம், நகை கடத்தல் சம்பவத்தில் இந்த ஊரை சேர்ந்த ஒருவர் இருப்பார். இந்த சிறிய நகரில் 130 நகைக்கடைகள் உள்ளன. பெரிய அளவில் வேலை செய்யாத நபர்கள் கூட ஆடம்பர கார்களில் வலம் வருகிறார்கள். தங்கம், பணம் மாற்றும் மையமாக இந்த கொடுவாலி உள்ளது என்று பொதுமக்கள் கூறினர்.
    Next Story
    ×