search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்கள் பாதுகாப்பில் கோவா முதலிடம்: மோசமான இடத்தில் பீகார், உத்தரபிரதேசம்
    X

    பெண்கள் பாதுகாப்பில் கோவா முதலிடம்: மோசமான இடத்தில் பீகார், உத்தரபிரதேசம்

    பிளான் இந்தியா என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் பெண்கள் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், வறுமை ஒழிப்பு ஆகியவற்றின் ஒட்டு மொத்த புள்ளிகள் அடிப்படையில் கோவா மாநிலம் முதலிடத்தை பெற்றுள்ளது.
    புதுடெல்லி:

    மத்திய பெண்கள்- குழந்தைகள் நலத்துறை சார்பில் பெண்கள் முன்னேற்றம் மற்றும் அவர்களுக்கான பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. ‘பிளான் இந்தியா’ என்ற அமைப்பின் மூலம் இந்த ஆய்வை நடத்தி உள்ளனர்.

    பெண்கள் தொடர்பான 170 வகையான தகவல்களை சேகரித்து அதன் மூலம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

    2011 மக்கள் தொகை பட்டியல் தேசிய குடும்ப நல ஆய்வு, சுகாதார மேலாண்மை, தகவல் அமைப்பு, மாவட்ட கல்வி தகவல்கள், குழந்தைகள் பற்றிய ஆய்வு, வருடாந்திர பொருளாதார ஆய்வு, வருடாந்திர கல்வி ஆய்வு, தேசிய சாதனை ஆய்வு போன்றவற்றின் விவரங்களை பெற்று அதன் மூலம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

    இதன்படி பெண்களுக்கு கிடைக்கும் பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, வறுமை ஒழிப்பு போன்றவற்றை மையமாக வைத்து புள்ளி விவரங்களை சேகரித்துள்ளனர்.

    இதையடுத்து பெண்களுக்கு எந்த மாநிலத்தில் பாதிப்புகள் அதிகம் உள்ளது என்று கணக்கிட்டு அதற்கான பட்டியலை வெளியிட்டுள்ளனர்.

    இதன்படி பெண்களுக்கு பாதிப்பு குறைவாகவும், பாதுகாப்பு அதிகமாகவும் உள்ள மாநிலமாக கோவா இருக்கிறது. 0 என்ற எண்ணில் இருந்து 1 வரை இதற்கான புள்ளிகள் கொடுக்கப்பட்டு இந்த அளவீட்டை கணக்கிட்டுள்ளனர்.

    இதன்படி தேசிய சராசரி 0.5314 ஆக இருக்கிறது. அதே நேரத்தில் கோவா மாநிலம் 0.656 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது. அங்கு பெண்களுக்கு அதிக பாதுகாப்பு உள்ளது. கல்வியில் 5-வது இடத்திலும், சுகாதாரத்தில் 6-வது இடத்திலும், வறுமை ஒழிப்பில் 8-வது இடத்திலும் கோவா உள்ளது. அதே நேரத்தில் ஒட்டுமொத்த புள்ளிகள் அடிப்படையில் கோவா முதலிடத்தில் இருக்கிறது.

    கேரள மாநிலம் 0.634 புள்ளிகளை பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது. அந்த மாநிலத்தில் சுகாதார நிலைமை மிக சிறப்பாக இருக்கிறது. இந்த வரிசையில் மிசோரம் மாநிலம் 0.63 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், சிக்கிம் மாநிலம் 0.61 புள்ளிகள் பெற்று 4-வது இடத்திலும், மணிப்பூர் 5-வது இடத்திலும் உள்ளது.


    நாட்டிலேயே பெண்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்ற நடவடிக்கைகளில் பீகார் மிக மோசமாக உள்ளது. அந்த மாநிலம் 0.41 புள்ளிகளை பெற்றுள்ளது.

    பீகாரில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதுடன் சுகாதாரத்திலும் மிக மோசமான நிலைமை உள்ளது. கல்வி மேம்பாடும் குறைவாக இருக்கிறது. 39 சதவீத பெண்களுக்கு திருமண வயது வருவதற்கு முன்பே திருமணம் நடத்தப்படுகிறது.

    அதில் 12.2 சதவீதம் பேர் 15 வயதில் இருந்து 19 வயதுக்குள்ளேயே கர்ப்பமாகிறார்கள். அல்லது குழந்தைக்கு தாயாக இருக்கிறார்கள். பீகார் மாநிலம் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பு வரிசையில் 30-வது இடத்தை பெற்றுள்ளது.

    பீகாருக்கு அடுத்த இடத்தில் உத்தரபிரதேசம் உள்ளது. அங்கு பெண்களின் நிலைமை மிக மோசமாக இருக்கிறது. அந்த மாநிலம் 0.43 புள்ளிகளை பெற்றுள்ளது.

    தலைநகரம் டெல்லி இந்த வரிசையில் 28-வது இடத்தில் உள்ளது. அங்கு பெண்கள் கல்வி மற்றும் பாதுகாப்பு மிகவும் மோசமாக இருப்பதாக அந்த புள்ளி விவரம் கூறுகிறது. டெல்லிக்கு 0.44 புள்ளிகள் கிடைத்துள்ளன.

    மோசமான மாநிலங்கள் வரிசை பட்டியலில் ஜார்கண்ட், அருணாசல பிரதேசம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளன.

    சிறந்த மாநிலங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள சிக்கிம், பஞ்சாப் மாநிலங்கள் வறுமை ஒழிப்பை தவிர, அனைத்து துறைகளிலும் சிறப்பான இடத்தை பெற்று இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

    ஆந்திர மாநிலம் இந்த வரிசையில் 12-வது இடத்தில் உள்ளது. அங்கு பெண்களுக்கு வன்முறை பாதிப்புகள் இருந்தாலும் சுகாதாரம் மற்றும் வறுமை ஒழிப்பு திட்டங்கள் சிறப்பாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

    நாட்டில் ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது, கல்வியில் சிறந்த மாநிலமாக இமாச்சலபிரதேசம், சிக்கிம், பஞ்சாப், மராட்டியம், கோவா ஆகியவை உள்ளன.

    இதில், மோசமான மாநிலமாக டெல்லி, அருணாசலபிரதேசம், ஜார்கண்ட், மேகாலயா, மத்திய பிரதேசம் ஆகியவை உள்ளன.

    சுகாதார மேம்பாட்டில் கேரளா, தமிழ்நாடு, சிக்கிம், கர்நாடகா, ஆந்திரா சிறந்த இடத்தை பிடித்துள்ளன. இதில், மோசமான மாநிலங்கள் பட்டியலில் பீகார், அரியானா, ஜார்கண்ட், மேகாலயா, மத்திய பிரதேசம் ஆகியவை உள்ளன.

    வறுமை ஒழிப்பு நடவடிக்கைகள் மணிப்பூர், மிசோரம், தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா ஆகியவற்றில் சிறப்பாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதில் மோசமான மாநிலமாக பீகார், உத்தரபிரதேசம், காஷ்மீர், அசாம், ஜார்கண்ட் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.
    Next Story
    ×