search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடகத்தில் ரெயில், விமான நிலையங்களில் கன்னட மொழிக்குத்தான் முதன்மை இடம்: சித்தராமையா
    X

    கர்நாடகத்தில் ரெயில், விமான நிலையங்களில் கன்னட மொழிக்குத்தான் முதன்மை இடம்: சித்தராமையா

    கர்நாடகத்தில் ரெயில், விமான நிலையங்களில் கன்னட மொழிக்குத்தான் முதன்மை இடம் என்று முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.
    பெங்களூரு:

    பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    போலீஸ் அதிகாரி கணபதி தற்கொலை விவகாரத்தில் மந்திரி பதவியை கே.ஜே.ஜார்ஜ் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமில்லை. கே.ஜே.ஜார்ஜ் மீது புதிதாக வழக்கு எதையும் சி.பி.ஐ. அதிகாரிகள் பதிவு செய்யவில்லை. ஏற்கனவே குஷால்நகர் போலீஸ் நிலையத்தில் பதிவாகி இருந்த வழக்கின்படி, சி.பி.ஐ. அதிகாரிகளும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மந்திரி பதவியை கே.ஜே.ஜார்ஜ் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எடியூரப்பா கூறுகிறார். அவர் மீது மோசடி, ஊழல், அரசு நிலத்தை விடுவித்தது போன்ற பல்வேறு வழக்குகள் உள்ளன.

    அதுபற்றி தேர்தல் ஆணையத்தில் எடியூரப்பா கொடுத்த ஆவணங்களிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. எடியூரப்பா மீது இருக்கும் வழக்குகளால் பா.ஜனதா மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வாரா?. ஒருவர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டதும், அவர் குற்றம் செய்திருப்பதாக கருத முடியாது. எந்த ஒரு நபர் மீதும் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தாலும், அந்த நபர் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்வது வாடிக்கையானது. எனவே கே.ஜே.ஜார்ஜ் மீது வழக்குப்பதிவு செய்ததும், அவரை பதவி விலக சொல்வது தேவையற்றது.

    போலீஸ் அதிகாரி தற்கொலை வழக்கில் ஏற்கனவே தானாக முன்வந்து தனது மந்திரி பதவியை கே.ஜே.ஜார்ஜ் ராஜினாமா செய்திருந்தார். அதே வழக்கில் மீண்டும் அவர் தனது பதவியை ராஜினாமா செய்யும்படி வற்புறுத்துவது சரியானதல்ல. இந்த விவகாரத்தில் கே.ஜே.ஜார்ஜுக்கு ஆதரவாக ஜனதாதளம்(எஸ்) மாநில தலைவர் குமாரசாமி கருத்து தெரிவித்து இருப்பதால், அவர் காங்கிரசுக்கு ஆதரவாக இருப்பதாக கருத முடியாது. குமாரசாமி தனது கருத்தை மட்டுமே தெரிவித்துள்ளார்.

    மந்திரி பதவியில் கே.ஜே.ஜார்ஜ் இருப்பதால், சி.பி.ஐ. விசாரணைக்கு இடையூறாக இருக்கும், அதனால் அவர் பதவி விலக வேண்டும் என்று பா.ஜனதாவினர் கூறி வருகின்றனர். சி.பி.ஐ., மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது. மத்தியில் பா.ஜனதா ஆட்சி நடக்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் சி.பி.ஐ. விசாரணையில் கே.ஜே.ஜார்ஜோ, மாநில அரசோ எப்படி தலையிட முடியும். எடியூரப்பா மற்றும் பா.ஜனதா தலைவர்கள் என்ன பேசுவது என்று கூட தெரியாமல் பேசுகிறார்கள்.

    கர்நாடகத்தில் கன்னட மொழிக்கு தான் முதன்மையான இடம் இருக்க வேண்டும். கன்னட மொழிக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும். மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள பெயர் பலகைகளில் இந்தி மொழியில் எழுதப்பட்டு இருந்தது அழிக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்கள், மெட்ரோ ரெயில் நிலையங்கள், மற்ற ரெயில் நிலையங்களில் கன்னட மொழியே ஆட்சி மொழியாக இருக்கும். பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் பயணிகளுக்கான விவரங்கள் அறிவிக்கப்படும்.

    பீதர்-கலபுரகி இடையிலான ரெயில் பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தாமதமாக தான் எனக்கு அழைப்பு வந்தது. ஏற்கனவே பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதால், பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை. மாநில அரசின் சார்பில் மந்திரி தேஷ்பாண்டே கலந்து கொள்கிறார்.

    இவ்வாறு முதல்-மந்திரி சித்தராமையா கூறினார். 
    Next Story
    ×