search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஜராத்தில் ‘பா.ஜனதாவில் இணைவதற்கு ரூ.1 கோடி பேரம் பேசினர்’: ஹர்திக் படேல் ஆதரவாளர் குற்றச்சாட்டால் பரபரப்பு
    X

    குஜராத்தில் ‘பா.ஜனதாவில் இணைவதற்கு ரூ.1 கோடி பேரம் பேசினர்’: ஹர்திக் படேல் ஆதரவாளர் குற்றச்சாட்டால் பரபரப்பு

    பா.ஜனதாவில் இணைவதற்கு ரூ.1 கோடி பேரம் பேசப்பட்டதாக ஹர்திக் படேல் ஆதரவாளர் ஒருவர் கூறிய குற்றச்சாட்டால் குஜராத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
    ஆமதாபாத்:

    பா.ஜனதாவில் இணைவதற்கு ரூ.1 கோடி பேரம் பேசப்பட்டதாக ஹர்திக் படேல் ஆதரவாளர் ஒருவர் கூறிய குற்றச்சாட்டால் குஜராத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    குஜராத்தில் கணிசமாக வசித்து வரும் படேல் இனத்தவர்கள், தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு வழங்கக்கோரி கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    ‘பதிதார் அனாமத் அண்டோலன் சமிதி’ (பாஸ்) என்ற அமைப்பின் தலைவரான ஹர்திக் படேல் தலைமையில் இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

    மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் இந்த அமைப்பினரின் ஆதரவை பெற பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. குறிப்பாக ஹர்திக் படேலை, காங்கிரசில் சேருமாறு மாநில தலைவர் பரத்சிங் சோலங்கி நேரடியாகவே அழைப்பு விடுத்தார். மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதம் கூடுதல் இடஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்தார்.

    இந்த நிலையில் ‘பாஸ்’ அமைப்பின் முன்னாள் தலைவர் வருண் படேல் மற்றும் ரேஷ்மா படேல் என ஹர்திக் படேலின் முக்கிய ஆதரவாளர்கள் இருவர் கடந்த 21-ந் தேதி பா.ஜனதாவில் இணைந்தனர். இடஒதுக்கீடு போராட்டங்கள் காங்கிரசுக்கு ஆதரவாக மாறி வருவதாகவும், தற்போதைய அரசை வெளியேற்றுவதற்கு பயன்படுத்தப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

    இதன் தொடர்ச்சியாக ‘பாஸ்’ அமைப்பின் வடக்கு குஜராத் பகுதி ஒருங்கிணைப்பாளரான நரேந்திர படேல் என்பவரும் நேற்று முன்தினம் மாலையில் மாநில பா.ஜனதா தலைவர் ஜித்து வகானியை சந்தித்தார். பின்னர் அவரது முன்னிலையில், தான் பா.ஜனதாவில் இணைந்ததாக அறிவித்தார்.

    ஆனால் திடீர் திருப்பமாக, இரவு சுமார் 10.30 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்த நரேந்திர படேல், தான் பா.ஜனதாவில் இணைவதற்கு ரூ.1 கோடி பேரம் பேசப்பட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை கூறினார்.

    அப்போது ரூ.10 லட்சம் பணத்தை செய்தியாளர்களிடம் காட்டிய அவர், பா.ஜனதாவில் இணைவதற்காக இந்த தொகை தனக்கு முன்பணமாக கொடுக்கப்பட்டதாக தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘இந்த ஒப்பந்தத்துக்கு வருண் படேல்தான் தரகராக செயல்பட்டார். பா.ஜனதா தலைவர் வகானியை சந்தித்து கட்சியில் இணைந்ததும் ரூ.1 கோடி எனக்கு தரப்படும் என அவர் கூறினார். அதன்படி இன்று (நேற்று முன்தினம்) மாலையில் மாநில பா.ஜனதா தலைமை அலுவலகத்துக்கு என்னை அழைத்து சென்றனர். அங்கு எனக்கு ரூ.10 லட்சம் தரப்பட்டது. மீதமுள்ள ரூ.90 லட்சம் திங்கட்கிழமை (நேற்று) நடைபெறும் பா.ஜனதா நிகழ்வின் போது தரப்படும் என்றும் கூறப்பட்டது’ என்றார்.

    பா.ஜனதாவின் இந்த நடவடிக்கையை அம்பலப்படுத்தவே, கட்சியில் இணைவதாக நாடகம் ஆடியதாக தெரிவித்த நரேந்திர படேல், தன்னால் தனது இனத்தினருக்கு ஒருபோதும் துரோகம் இழைக்க முடியாது என்றும், தன்னையோ, ‘பாஸ்’ அமைப்பு மீது தான் வைத்துள்ள விசுவாசத்தையோ பா.ஜனதாவால் விலைக்கு வாங்க முடியாது என்றும் கூறினார்.

    நரேந்திர படேலின் இந்த குற்றச்சாட்டு குஜராத் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பா.ஜனதாவை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி குறைகூறியுள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் தளத்தில் அவர் கூறுகையில், ‘குஜராத், விலை மதிப்பற்றது. அது ஒருபோதும் வாங்கப்படவும் இல்லை, வாங்க முடியவும் இல்லை. இனியும் அது ஒருபோதும் வாங்கப்படாது’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

    ஆனால் நரேந்திர படேலின் குற்றச்சாட்டை பா.ஜனதா மறுத்துள்ளது. இது குறித்து கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் பரத் பாண்டியா கூறும்போது, ‘இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய். இது, காங்கிரசின் கட்டளைப்படி நரேந்திர படேல் நடத்திய ஒரு நாடகம் ஆகும். அவர் பா.ஜனதாவில் இணைவதற்கு தானாகவே வந்தார். பின்னர் சில மணி நேரத்தில் பல்டி அடித்துள்ளார். இவை அனைத்தும் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை என்பதையே இது நிரூபித்துள்ளது’ என்று தெரிவித்தார். 
    Next Story
    ×