search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீர் பிரச்சினையில் பேச்சுவார்த்தை நடத்த சிறப்பு அதிகாரி நியமனம்: மத்திய அரசு அறிவிப்பு
    X

    காஷ்மீர் பிரச்சினையில் பேச்சுவார்த்தை நடத்த சிறப்பு அதிகாரி நியமனம்: மத்திய அரசு அறிவிப்பு

    காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அனைத்து தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்த சிறப்பு அதிகாரியை மத்திய அரசு நியமித்தது.
    புதுடெல்லி:

    காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அனைத்து தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்த சிறப்பு அதிகாரியை மத்திய அரசு நியமித்தது.

    மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று செய்தியாளர்களை அவசரமாக அழைத்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வுகாணும் விதமாக தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு சிறப்பு அதிகாரியாக புலனாய்வுத்துறையின் முன்னாள் இயக்குனர் தினேஷ்வர் சர்மாவை மத்திய அரசு நியமித்து இருக்கிறது. அவருக்கு மத்திய மந்திரிக்குரிய அந்தஸ்து வழங்கப்பட்டு உள்ளது. அவர் காஷ்மீர் மாநிலத்தில் அனைத்து தரப்பினரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்.



    காஷ்மீர் மக்களின், குறிப்பாக இளைஞர்களின் நியாயமான அபிலாஷைகளை அறிந்துகொள்வதற்கும் முயற்சிப்பார்.

    பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் காஷ்மீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அறிவித்து இருந்தார். அதன்படி தற்போது, பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கி உள்ளது. காஷ்மீரில் அனைத்து தரப்பினரையும் சந்தித்து பேசிய பிறகு மாநில முதல்-மந்திரி மெகபூபாவிடம் அதுபற்றி தினேஷ்வர் சர்மா விரிவாக எடுத்து கூறுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது நிருபர்கள், பிரிவினைவாத ஹூரியத் மாநாடு அமைப்புடன் மத்திய அரசின் சிறப்பு அதிகாரி பேச்சுவார்த்தை நடத்துவாரா? என்று கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்த ராஜ்நாத் சிங், “யாருடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்பதை சிறப்பு அதிகாரியே முடிவு செய்வார். அதற்குரிய அத்தனை சுதந்திரமும் அவருக்கு உண்டு” என்றார்.

    ஒரு போலீஸ் அதிகாரியால் உணர்வுபூர்வமான ஒரு பிரச்சினையில் சிறப்பாக செயல்பட முடியும் என்று கருதுகிறீர்களா? என்ற இன்னொரு கேள்விக்கு, “இதில் தவறு என்ன இருக்கிறது. சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டவர், அரசியல் சார்பற்றவர். எந்த அரசியல் அமைப்புடனும் தொடர்பு இல்லாதவர். இதுதான் அவருடைய மிகப்பெரிய பலம்.

    மேலும், நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு நிலவரத்தை நன்கு அறிந்தவர்” என்று குறிப்பிட்டார். தினேஷ்வர் சர்மா, 1979-ம் ஆண்டு பிரிவை சேர்ந்த ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை மத்திய புலனாய்வு துறையின் இயக்குனராக பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×