search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இமாச்சல் தேர்தல்: ஒரு குடும்பத்துக்கு ஒரு சீட்டு கொள்கையை மாற்றிய காங்கிரஸ்
    X

    இமாச்சல் தேர்தல்: ஒரு குடும்பத்துக்கு ஒரு சீட்டு கொள்கையை மாற்றிய காங்கிரஸ்

    இமாச்சலபிரதேச தேர்தலில் ஒரே குடும்பத்தில் இருவர் போட்டியிடலாம் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

    சிம்லா:

    எம்.பி. தேர்தல், எம்.எல்.ஏ.க்கள் தேர்தலில் ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே டிக்கெட் கொடுப்பது என்ற கொள்கையை காங்கிரஸ் சமீப ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறது.

    இமாச்சலபிரதேச மாநில சட்டசபை தேர்தலில் இந்த கொள்கை மாற்றப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் அடுத்த மாதம் 9-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் ஆகும்.

    அனைத்து கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு மனுதாக்கல் நடந்து வருகிறது. இமாச்சலபிரதேச காங்கிரஸ் முதல்-மந்திரியாக உள்ள வீரபத்திரசிங் அர்க்கி தொகுதியில் போட்டியிடுகிறார்.


    கடந்த முறை இவர் சிம்லா ரூரல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தடவை அவரது மகன் விக்ரமாதித்ய சிங்கிற்கு சிம்லா ரூரல் தொகுதியை கேட்டார். காங்கிரசில் ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே டிக்கெட் கொள்கை கடைபிடிக்கப்பட்டதால் விக்ரமாதித்யசிங்கிற்கு வாய்ப்பு கிடைக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இந்த நிலையில் விக்ரமாதித்யசிங் டெல்லியில் முகாமிட்டு டிக்கெட் பெறுவதற்கு தொடர்ந்து முயற்சித்து வந்தார். அதில் வெற்றி கிடைத்தது. அவருக்கு சிம்லா ரூரல் தொகுதி தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது.

    இதேபோல மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் கவுல்சிங்தாகூர் டராங் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரது மகள் சம்பா தாகூருக்கு மாண்டி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    மாண்டி தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் மத்திய மந்திரி சுக்ராம் மகன் அனில்சர்மா பாரதிய ஜனதா சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் காங்கிரசில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சமீபத்தில் தான் பாரதிய ஜனதாவில் சேர்ந்தார். அவரை தோற்கடிக்கும் நோக்கத்துடன் சம்பா தாகூருக்கு அந்த தொகுதியில் டிக்கெட் வழங்கி உள்ளனர்.


    இமாச்சலபிரதேச சபாநாயகர் பி.பி.எல். புட்டாய்ல் இப்போதும் தேர்தலில் போட்டியிடுகிறார். அவரது மகன் ஆசிஸ் புட்டாய்ல்க்கு பலாப்பூர் தொகுதியில் போட்டியிட டிக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×