search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தல் கமிஷனிடம் தினகரன் தரப்பில் வழங்கப்பட்டவை போலி ஆவணங்கள்: கே.பி.முனுசாமி
    X

    தேர்தல் கமிஷனிடம் தினகரன் தரப்பில் வழங்கப்பட்டவை போலி ஆவணங்கள்: கே.பி.முனுசாமி

    தேர்தல் கமிஷனிடம் டி.டி.வி.தினகரன் அணி தரப்பில் வழங்கப்பட்டவை போலி ஆவணங்கள் என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறினார்.
    புதுடெல்லி:

    இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் கமிஷன் நடத்தும் விசாரணையில் கலந்துகொள்வதற்காக டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, அங்கு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியினர் உட்கட்சி பிரச்சினைக்காக தேர்தல் கமிஷனை அணுகினார்கள். அது தொடர்பான விசாரணையில் அந்த கட்சியின் நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையை கருத்தில் கொண்டு தேர்தல் கமிஷன் தீர்ப்பு வழங்கியது. அதன் அடிப்படையில் அகிலேஷ் யாதவுக்கு அக்கட்சியின் சின்னம் ஒதுக்கப்பட்டது.



    அதுபோலவே இப்போது அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் தலைமையில் இயங்கும் ஒருங்கிணைந்த அணிக்கு பொதுக்குழுவின் அங்கீகாரம் கிடைத்து உள்ளது. 1,187 பொதுக்குழு உறுப்பினர்கள் பிரமாண பத்திரத்தை வழங்கி இருக்கிறார்கள். சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களும் கொடுத்து இருக்கிறார்கள். இதன் அடிப்படையில் இரட்டை இலை சின்னம் எங்களுக்குத்தான் கிடைக்கும்.



    டி.டி.வி.தினகரன் அணியினர் தாங்கள் ஜெயிக்க மாட்டோம் என்று தெரிந்து, வேண்டும் என்றே கால அவகாசம் கேட்டு தேர்தல் கமிஷன் விசாரணையை ஒத்திப்போட முயற்சிக்கிறார்கள். அது மட்டுமின்றி போலியான ஆவணங்களை தாக்கல் செய்து இருக்கிறார்கள். இது கடந்த விசாரணையிலேயே வெளிப்படையாக தெரிந்து விட்டது. அவர்கள் பொய்களை உண்மை போல திரித்து தேர்தல் கமிஷனில் பேசுகிறார்கள். அது நிற்கப்போவது இல்லை. எங்கள் ஆவணங்களில் ஒன்று கூட போலியான ஆவணம் கிடையாது. முறையான ஆவணங்களையே கொடுத்து இருக்கிறோம்.

    இவ்வாறு கே.பி.முனுசாமி கூறினார்.

    முன்னதாக டெல்லி செல்வதற்காக அவர் சென்னை விமான நிலையத்துக்கு வந்த போது நிருபர்களிடம் பேசுகையிலும், டி.டி.வி.தினகரன் அணி தரப்பில் தேர்தல் கமிஷனிடம் போலி ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.


    Next Story
    ×