search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி. சிறைகளில் தினம் ஒருவர் மரணம்: 5 ஆண்டுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
    X

    உ.பி. சிறைகளில் தினம் ஒருவர் மரணம்: 5 ஆண்டுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

    உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள சிறைகளில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என சிறைத்துறை தெரிவித்துள்ளது.

    லக்னோ:

    உத்தர பிரதேசம் மாநிலத்தில் 62 மாவட்ட சிறைச்சாலைகள், 5 மத்திய சிறைச்சாலைகள், 3 சிறப்பு சிறைச்சாலைகள் உள்ளன. இந்நிலையில், அங்குள்ள சிறைகளில், சிறை மரணங்கள் அதிகரித்து வருவதாக தகவல் வெளியானது. இதுகுறித்து ஆக்ராவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரேஸ் பராஸ் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சிறைத்துறையினரிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

    இதற்கு சிறைத்துறையினர் தற்போது பதிலளித்துள்ளனர். அவர்கள் அளித்துள்ள பதிலில் கூறப்பட்டிருப்ப்பதாவது:-

    2012-ம் ஆண்டிலிருந்து 2017-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் உ.பி. மாநிலத்தில் சுமார் 2,016 சிறைமரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் 2012-ம் ஆண்டில் 360 பேரும், 2013-ம் ஆண்டு 358 பேரும், 2014-ம் ஆண்டு 339 பேரும், 2015-ம் ஆண்டு 359 பேரும், 2016-ம் ஆண்டு 412 பேரும், இந்த ஆண்டில் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 188 பேரும் சிறைகளில் மரணமடைந்துள்ளனர்.

    2016-ம் ஆண்டு மரணமடைந்தவர்களில் அதிகமானோர் 25 முதல் 40 வயதிற்குட்பட்டவர்கள் எனவும், அவர்கள் மீதான வழக்குகள் நிறைவடைவதற்கு முன்னரே மரணமடைந்து விட்டனர் எனவும் சிறைத்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    மற்றபடி மரணமடைந்தவர்கள் மிகவும் வயதானவர்கள். குறிப்பாக கடந்த 10.05.2013 அன்று புலந்த்ஷகார் சிறையில் 106 வயதான ஒரு கைதி மரணமடைந்துள்ளார். இதேபோல 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பஸ்தி சிறையில் 100 வயதான ஒரு கைதி மரணமடைந்துள்ளார்.

    அவர்களது மரணத்திற்கு உயர் ரத்த அழுத்தம், காசநோய், ஆஸ்துமா ஆகியவை காரணங்களாக கூறப்பட்டுள்ளது. உ.பி. சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண் கைதிகளில் குழந்தைகளும் மரணமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து பேசிய நரேஸ் பராஸ், “சிறைகள் கைதிகள் சீர்திருத்தம் செய்து, அவர்களை இந்த உலகிற்கு மறுபடி புதிய மனிதர்களாக அனுப்ப வேண்டும். ஆனால் தற்போது சிறையில் உள்ள நிலைமை மோசமாக உள்ளது. சிறைத்துறையினர் மரணத்திற்கு கூறியுள்ள காரணத்தை ஏற்றுகொண்டாலும், அந்த அளவிற்கு அசுத்தமாக சிறைகள் உள்ளனவா? என கேள்வி எழும்புகிறது. அப்படி இருப்பின் சுகாதாரத்துறையினர் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்”என கூறினார்.
    Next Story
    ×