search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஜராத் சட்டசபை தேர்தல்: பா.ஜ.க.வுக்கு எதிராக வலுவான அணியை உருவாக்க காங்கிரஸ் தீவிர முயற்சி
    X

    குஜராத் சட்டசபை தேர்தல்: பா.ஜ.க.வுக்கு எதிராக வலுவான அணியை உருவாக்க காங்கிரஸ் தீவிர முயற்சி

    குஜராத் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு எதிராக வலுவான அணியை உருவாக்க காங்கிரஸ் தீவிர முயற்சியில் ஈடுப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக பிற்படுத்தப்பட்டோர் தலைவர் காங்கிரசில் சேர இருக்கிறார்.
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான தேர்தல் தேதி எந்த நேரத்திலும் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    குஜராத்தில் ஆளும் கட்சியாக பாரதிய ஜனதா கட்சி உள்ளது. முக்கிய எதிர்க்கட்சியாக காங்கிரஸ் இருக்கிறது. அங்கு 20 ஆண்டுகளாக தொடர்ந்து பாரதிய ஜனதா ஆட்சியில் இருந்து வருகிறது.

    எனவே, இந்த தடவை காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க தீவிர முயற்சியில் இறங்கி உள்ளது.

    அந்த மாநிலத்தில் நரேந்திர மோடி முதல்- மந்திரியாக இருந்த வரை பாரதிய ஜனதா செல்வாக்குடன் இருந்தது. தற்போது இதன் செல்வாக்கு சரிந்துள்ளது.

    இதை சரியாக பயன்படுத்தி ஆட்சிக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸ் அங்கு பாரதிய ஜனதாவுக்கு எதிராக உள்ள சிறு கட்சிகள், அமைப்புகள் ஆகியவற்றை ஒருங்கிணைந்து வலுவான அணியை உருவாக்க முயற்சித்து வருகிறது.

    அங்கு பிற்படுத்தப்பட்டோர் தலைவராக அல்பேஸ்தாகோர் செயல்பட்டு வருகிறார். அதே போல் பட்டேல் சமூக தலைவராக ஹிருத்திக் பட்டேலும், தலித் தலைவராக ஜிக்னேஷ் மெவானியும் செயல்படுகிறார்கள். இவர்கள் 3 பேரையும் காங்கிரசுக்கு ஆதரவு அளிக்க வைக்க முயற்சி நடந்து வருகிறது.

    இதில், அல்பேஸ்தாகோர் காங்கிரசில் தனது அமைப்பை இணைப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். நேற்று அவர் ராகுல்காந்தியை இது சம்பந்தமாக சந்தித்து பேசினார். இதில் உடன்பாடு ஏற்பட்டது.

    இதையடுத்து குஜராத்தில் காந்தி நகரில் நாளை நடைபெறும் மாநாட்டில் ராகுல்காந்தி முன்னிலையில் தனது அமைப்பை காங்கிரசில் இணைத்து கொள்கிறார்.

    இது சம்பந்தமாக அல்பேஸ்தாகோர் கூறும் போது, விவசாயிகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் கோரிக்கைகள் பற்றி பேசினேன். காங்கிரசுக்கும் அதே கொள்கைதான் இருக்கிறது என்று ராகுல் கூறினார். இதை ஏற்று கொண்டு காங்கிரசில் இணைகிறோம் என்று கூறினார்.

    இதேபோல் பட்டேல் சமூக தலைவர் ஹிருத்திக் பட்டேலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அவர் காங்கிரசில் சேர மறுத்து விட்டார். ஆனாலும், காங்கிரசுக்கு மறைமுகமாக ஆதரவு அளிப்பது போல் பேசி உள்ளார். அவர் கூறியதாவது:-

    பாரதிய ஜனதா எங்களது முதன்மை எதிரி. பாரதிய ஜனதா என்கிற அடாவடி கட்சிக்கு எதிராக போரிடுவது என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம். ஆனால், காங்கிரசில் சேர மாட்டோம்.

    காங்கிரஸ் எங்களை அவர்களது அணியில் சேர சொல்வது அரசியல் ஸ்டண்டு. இதற்குள் நாங்கள் சிக்கி கொள்ள மாட்டோம். நான் தேர்தலில் போட்டியிடவும் மாட்டேன். தேர்தலில் நிற்பது எனது நோக்கமும் கிடையாது. எங்கள் சமூகத்தினருக்கு உரிய இடஒதுக்கீடு பெற தொடர்ந்து போராடி வெற்றி பெறுவதுதான் ஒரே நோக்கம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஹிருத்திக் பட்டேல் காங்கிரஸ் அணியில் சேர மறுத்தாலும் அவருடைய கருத்துக்கள் அனைத்தும் காங்கிரசுக்கு சாதகமாகவே உள்ளன.

    இதேபோல் தலித் தலைவர் ஜிக்னேஷ் மெவானியும் காங்கிரசில் சேர மறுத்து விட்டார். ஆனாலும், காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பது போல் அவரும் கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

    அவர் கூறும் போது, குஜராத்தில் காங்கிரஸ் முக்கிய எதிர்க்கட்சியாக உள்ளது. பாரதிய ஜனதாவை இங்கிருந்து அகற்ற வேண்டும் என்றால் மக்கள் காங்கிரசுக்குதான் ஓட்டு போட்டு ஆக வேண்டும். வேறு மாற்று வழி எதுவும் இல்லை என்றார்.

    இதற்கிடையே ஹிருத்திக் பட்டேலுக்கு அடுத்த நிலையில் இருந்த 70 நிர்வாகிகளை பாரதிய ஜனதா தன் பக்கம் இழுத்துள்ளது. அவர்கள் பாரதிய ஜனதாவில் சேரப்போவதாக வெளிப்படையாக அறிவித்துள்ளனர்.
    Next Story
    ×