search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சொத்து மதிப்பு அதிகரிப்பு: அமித்ஷா மகனிடம் விசாரிக்காதது ஏன்? என லாலு பிரசாத் கேள்வி
    X

    சொத்து மதிப்பு அதிகரிப்பு: அமித்ஷா மகனிடம் விசாரிக்காதது ஏன்? என லாலு பிரசாத் கேள்வி

    ஜெய்ஷா நிறுவனத்தின் வருமானம் குறுகிய காலத்தில் பல மடங்கு அதிகரித்ததாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, இதுதொடர்பாக அமித்ஷா மகனிடம் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரிக்காதது ஏன்? என லாலு பிரசாத் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

    பாட்னா:

    பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா. இவரது மகன் ஜெய்ஷா. 2014-ம் ஆண்டு பாரதிய ஜனதா ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஜெய்ஷா நடத்தி வரும் நிறுவனத்தின் வருமானம் பல மடங்கு அதிகரித்து விட்டதாக இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டது.

    ஜெய்ஷா நிறுவனத்தின் வருமானம் ஒரே ஆண்டில் ரூ.50 ஆயிரம் என்பதில் இருந்து 16 ஆயிரம் மடங்கு அதிகரித்து ரூ.80 கோடியாக உயர்ந்துவிட்டதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இந்த குற்றச்சாட்டு தொடர்பாக வெளிப்படையான விசாரணை நடந்த வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வலியுறுத்தின. அமித்ஷா மகன் பிரதமர் மோடி மவுனத்தை எப்போது கலைக்க போகிறார்? என்று ராகுல்காந்தி கேள்வி எழுப்பி இருந்தார்.

    இந்த நிலையில் ஜெய்ஷா நிறுவனங்களின் சொத்து மதிப்பு திடீரென அதிகரித்தது குறித்து சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தாதது ஏன்? என்று ராஷ்ட்ரிய ஜனதா தலைவரும், பீகார் முன்னாள் முதல்- மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ் கேள்வி எழுப்பி உள்ளார்.

    சுதந்திர போராட்ட வீரரும், பீகார் முன்னாள் முதல்-மந்திரியுமான ஸ்ரீகிருஷ்ண சிங்கின் 130-வது பிறந்த தினவிழா காங்கிரஸ் சார்பில் பாட்னாவில் நடத்தப்பட்டது.

    இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, லாலு இந்த கேள்வியை எழுப்பினார். இதுகுறித்து அவர் பேசியதாவது:-

    மத்திய பா.ஜனதா அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் சாமானிய மக்களை பாதிக்கும் வகையிலேயே உள்ளன. ஜி.எஸ்.டி.யால் பல தரப்பட்ட மக்களும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். மத்திய பாரதிய ஜனதா அரசின் தூண்டுதலின் பேரில் தான் என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    பா.ஜனதா தலைவர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவுக்கு சொந்தமான நிறுவனங்களின் சொத்து மதிப்பு குறுகிய காலத்தில் பல மடங்கு அதிகரித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக சி.பி.ஐ. அமைப்பும், அமலாக்கத்துறையும் அவரிடம் விசாரிக்காதது ஏன்?

    காங்கிரஸ் கட்சியுடனும், அதன் தலைவர்களுடனும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் நெருக்கமான நட்புறவை வைத்துள்ளது. தேசிய கட்சியான காங்கிரசும், நாங்களும் பல்வேறு சமயங்களில் ஒருங்கிணைந்து செயல்பட்டுள்ளோம்.

    இவ்வாறு லல்லுபிரசாத் யாதவ் பேசினார்.

    இந்த விழாவில் முன்னாள் சபாநாயகர் மீராகுமார், கேரளா முன்னாள் கவர்னர் நிகில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Next Story
    ×