search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஜராத் மாநிலத்தில் தேர்தல் வருவதால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு
    X

    குஜராத் மாநிலத்தில் தேர்தல் வருவதால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு

    குஜராத் மாநிலத்தில் வரும் டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் வருவதால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க பா.ஜ.க. அரசு முடிவு செய்துள்ளது.
    ஆமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் வரும் டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

    இதற்கான தேர்தல் தேதி அட்டவணை விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.

    கடந்த 20 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வரும் பா.ஜ.க. 5-வது முறையாக ஆட்சியைக் கைப்பற்ற தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் என்பதால் அங்கு சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற வேண்டும் என்பதை பா.ஜ.க. மூத்த தலைவர்கள் கவுரவ பிரச்சினையாக கருதுகிறார்கள்.

    ஆனால் காங்கிரஸ் கட்சி அத்தகைய வெற்றியை தடுக்கும் வகையில் பணிகளைத் தொடங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து குஜராத் மாநில வாக்காளர்களை கவரும் வகையில் பா.ஜ.க. அரசு மிகத்தாராளமாக புதிய அறிவிப்புகளை, சலுகைகளை அறிவித்து வருகிறது.

    சுமார் 25 லட்சம் விவசாயிகளுக்கு வட்டி இல்லாமல் கடன்கள் வழங்கப்படும் என்று கடந்த வாரம் குஜராத் முதல்-மந்திரி விஜய் ரூபானி அறிவித்தார். இதைத் தொடர்ந்து ஆசிரியர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் அரசு ஊழியர்களின் சம்பளத்தை பா.ஜ.க. அரசு உயர்த்தியுள்ளது.



    உள்ளாட்சிகள் சார்பில் நடத்தப்படும் பள்ளிகளில் ஆசிரியர்களாக இருப்பவர்களுக்கு தற்போது ரூ.16,500 நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிர்ணய சம்பளத்தை ரூ.25 ஆயிரமாக உயர்த்தியுள்ளனர்.

    அதுபோல உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள அரசு ஊழியர்களின் சம்பளம் 7-வது சம்பள கமி‌ஷன் பரிந்துரை அடிப்படையில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இலவச மருத்துவம் பெற ஆண்டு வருமானம் ரூ.1.50 லட்சமாக இருக்க வேண்டும் என்ற வரம்பு ரூ.2.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    இது குஜராத் மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த 1 மாதத்தில் 3 தடவை குஜராத் சென்ற பிரதமர் மோடி வருகிற 22-ந்தேதி மீண்டும் குஜராத் செல்ல திட்டமிட்டுள்ளார்.

    அதற்கு முன்னதாக மேலும் சில சலுகைகள் அறிவிப்புகளை வெளியிட குஜராத் பா.ஜ.க.வினர் முடிவு செய்துள்ளனர்.
    Next Story
    ×