search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொல்கத்தா எல்.ஐ.சி. கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து: ஊழியர்கள் வெளியேற்றம்
    X

    கொல்கத்தா எல்.ஐ.சி. கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து: ஊழியர்கள் வெளியேற்றம்

    கொல்கத்தாவில் உள்ள எல்ஐசி கட்டிடத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டதையடுத்து ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
    கொல்கத்தா:

    மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவின் ஜவகர்லால் நேரு சாலையில் ஜீவன் சுதா என்ற மிகப்பெரிய வணிக வளாகம் ஒன்று உள்ளது. எல்.ஐ.சி. அலுவலகம், வங்கி, நிதி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் இதில் செயல்படுகின்றன. 19 மாடிகள் கொண்ட இந்த கட்டிடத்தின் 16-வது தளத்தில் இன்று காலை 10.20 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் படிப்படியாக அந்த தளம் முழுவதும் பரவத் தொடங்கியது.



    இதன் காரணமாக வேலைக்கு வந்திருந்த ஊழியர்கள் அனைவரும் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். மற்ற தளங்களுக்கும் தீ பரவும் அபாயம் இருந்ததால் அங்கிருந்த ஊழியர்களும் வெளியேற்றப்பட்டனர். உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் 10 வண்டிகளில் வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தீ அசுர வேகத்தில் பரவியதால் உள்ளே யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தீப்பிடித்த தளத்தில் ஸ்டேட் வங்கியின் சர்வர் அறை உள்ளது. எனவே, பல லட்சம் மதிப்பிலான கம்ப்யூட்டர்கள் தீயில் கருகியிருக்கலாம் என தெரிகிறது. உள்ளே ஊழியர்கள் யாராவது சிக்கியிருக்கிறார்களா? என்பது தெரியவில்லை. தீயை முழுமையாக அணைத்த பிறகே சேத விவரம் தெரியவரும்.
    Next Story
    ×