search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பையில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை - மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே திறந்து வைத்தார்
    X

    மும்பையில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை - மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே திறந்து வைத்தார்

    மும்பையில் முதல்முறையாக முல்லுண்டில் பொதுஇடத்தில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் முழுஉருவச்சிலையை மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே நேற்று திறந்து வைத்தார்.
    மும்பை:

    மும்பை தமிழ் தொழில் வர்த்தக சபை, நேஷனல் எஜூகேசன் சொசைட்டி மற்றும் சரஸ்வதி வித்யா பவன் குழுமங்களின் நிறுவன தலைவர் ஆர்.வரதராஜன் மும்பையில் முதல் முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் சிலையை திறப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். இதற்காக 11 அடி கொண்ட திருவள்ளுவரின் முழு உருவச்சிலை கன்னியாகுமரியில் உருவாக்கப்பட்டு மும்பை கொண்டு வரப்பட்டு, முல்லுண்டு கிழக்கு மகாடா காலனியில் உள்ள கிழக்கு விரைவு சாலையில் நிறுவப்பட்டது.

    திருவள்ளுவரின் இந்த சிலை ஓலைச்சுவடியை கையில் ஏந்தி நிமிர்ந்து நின்று கம்பீரமாக காட்சி அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதே இடத்தில் முல்லுண்டு எம்.எல்.ஏ. சர்தார் தாராசிங் ஏற்பாட்டில் புத்தர் சிலையும் நிறுவப்பட்டுள்ளது.

    திருவள்ளுவர், புத்தர் சிலைகளின் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு எம்.எல்.ஏ. சர்தார் தாராசிங், கிரித் சோமையா எம்.பி. ஆகியோர் தலைமை தாங்கினர். கவுரவ அழைப்பாளராக மாநில வீட்டுவசதித்துறை மந்திரி பிரகாஷ் மேத்தா கலந்துகொண்டார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே கலந்துகொண்டு திருவள்ளுவர் சிலையையும், புத்தர் சிலையையும் திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-



    வாழ்க்கையின் அடிப்படை தத்துவத்தை தமிழ்புலவர் திருவள்ளுவர் அந்த காலத்திலேயே திருக்குறள் மூலமாக நமக்கு தெரிவித்துவிட்டார். இதேபோல மராட்டியத்தை சேர்ந்த துக்காராம், ஞானேஸ்வர் உள்பட பல ஞானிகளும் நமக்கு உணர்த்தி இருக்கிறார்கள். நான் மேற்கொண்ட பாரத யாத்திரையை கன்னியாகுமரியில் இருந்து தான் தொடங்கினேன்.

    அப்போது அங்கு நிறுவப்பட்டு இருக்கும் 133 அடி உயர திருவள்ளுவரின் சிலையை கண்டு வியப்புற்றேன். இங்கு திருவள்ளுவரின் சிலையும், புத்தரின் சிலையும் அருகருகே நிறுவப்பட்டு உள்ளது. இதன்மூலம் இரு மகான்களையும் ஒரே இடத்தில் தரிசிக்கும் வாய்ப்பு மக்களுக்கு கிடைத்து இருக்கிறது.

    இதற்கான முயற்சி எடுத்த டாக்டர் வரதராஜன், சர்தார் தாராசிங் எம்.எல்.ஏ. ஆகியோருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக சிறப்பு விருந்தினர்களை ஆர்.வரதராஜன் சால்வை அணிவித்து கவுரவித்தார். விழாவில் சிவசேனா தாராவி தாலுகா துணைத் தலைவர் பி.எஸ்.கே.முத்துராமலிங்கம், கவுன்சிலர் மாரியம்மாள், தமிழ் லெமுரியா அறக்கட்டளை தலைவர் குமணராசன், ராமச்சந்திரன், பா.ஜனதா பிரமுகர் கே.ராஜ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×