search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் இருந்து இடதுசாரிகளை விரைவில் மக்கள் தூக்கியெறிவார்கள்: பா.ஜ.க. தலைவர் அமித்ஷா
    X

    கேரளாவில் இருந்து இடதுசாரிகளை விரைவில் மக்கள் தூக்கியெறிவார்கள்: பா.ஜ.க. தலைவர் அமித்ஷா

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பா.ஜ.க.வின் ஜன் ரக் ஷா யாத்திரையில் பங்கேற்ற பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா பேசுகையில், கேரளாவில் இருந்து இடதுசாரிகளை விரைவில் மக்கள் தூக்கியெறிவார்கள் என தெரிவித்துள்ளார்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பா.ஜ.க.வின் ஜன் ரக் ஷா யாத்திரையில் பங்கேற்ற பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா பேசுகையில், கேரளாவில் இருந்து இடதுசாரிகளை விரைவில் மக்கள் தூக்கியெறிவார்கள் என தெரிவித்துள்ளார்.

    கேரள மாநிலத்தில் இடதுசாரிகளால் பா.ஜ.க.வினர் தொடர்ந்து கொல்லப்படுவதாகக் கூறியும் அதற்கு கண்டனம் தெரிவித்தும் பா.ஜ.க.வினர் ஜன் ரக் ஷா யாத்திரையை நடத்தி வருகின்றனர். இந்த யாத்திரையை பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா கடந்த 3-ஆம் தேதி கண்ணூரில் தொடங்கிவைத்தார்.

    இந்த யாத்திரையின் நிறைவு விழா இன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அதில் அமித்ஷா கலந்து கொண்டு பேசியதாவது:

    கேரளாவில் இடதுசாரி தலைமையிலான ஆட்சி அமையும் போது பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை 30 பேரும், 2006ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை 28 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.

    மேலும், இடதுசாரி தலைமையில் கடந்த ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றது முதல் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் 13 பேர் படுகொலை செய்யப்பட்டதற்கு முதல் மந்திரி பினராயி விஜயன் பொறுப்பேற்க தயாரா.

    அரசியலில் வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருவதால் மக்கள் குறுகிய காலத்தில் இடதுசாரிகளை கேரளாவில் இருந்து தூக்கியெறியும் நிலை வெகு தூரத்தில் இல்லை.

    மக்களை நோக்கி நடைபெற்ற பாத யாத்திரையில் சுமார் 11 மாவட்டங்களில் 140 கி.மீ. தூரம் பயணம் செய்துள்ளோம். இந்த யாத்திரை மூலம் இடதுசாரிகளின் அட்டூழியங்களை மக்களுக்கு வெளிப்படுத்தி உள்ளோம்.

    இதேபோல், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அமைக்கப்பட்ட 13-வது நிதிக்குழு 45,395 கோடி ரூபாய் மாநிலத்துக்கு நிதி ஒதுக்கியது. ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசில் அமைக்கப்பட்ட நிதிக்குழு 1.13 லட்சம் கோடி ரூபாய் கேரளா மாநிலத்துக்கு நிதி ஒதுக்கியுள்ளது.

    இடதுசாரிகளான நீங்கள் எங்களுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறீர்கள். ஆனால் நாங்கள் மாநிலத்தின் வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×