search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டார்ஜீலிங்கில் இருந்து துணை ராணுவத்தை திரும்பப் பெற கொல்கத்தா ஐகோர்ட் தடை
    X

    டார்ஜீலிங்கில் இருந்து துணை ராணுவத்தை திரும்பப் பெற கொல்கத்தா ஐகோர்ட் தடை

    டார்ஜீலிங் நகரில் இருந்து துணை ராணுவப் படைகளை திரும்பப் பெறும் மத்திய அரசின் முடிவுக்கு கொல்கத்தா ஐகோர்ட் வரும் 27-ம் தேதிவரை தடை விதித்துள்ளது.
    கொல்கத்தா:

    மேற்கு வங்க அரசு கூர்கா இனத்தவர்கள் வசிக்கும் டார்ஜிலிங் பகுதியிலும் வங்காள மொழி அடிப்படையில் ஆட்சி நடத்துகிறது. எனவே தங்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என்று கூர்கா இனத்தவர்கள் வலியுறுத்தி வந்தனர். தங்களது கோரிக்கைய உடனடியாக நிறைவேற்ற வேண்டும் டார்ஜீலிங் நகரில் வன்முறைகளில் அவர்கள் ஈடுபட்டனர். வாகனங்கள் எரிக்கப்பட்டன. பொதுச் சொத்துகள் நாசமடைந்தன. பல உயிரிழப்பும் ஏற்பட்டது.

    கூர்காலாந்து போராட்ட குழு தலைவர் பிமல் குருங், மேற்கு வங்காளம் மாநில அரசுடன் சமாதானம் பேச மறுத்துவிட்டார். இதையடுத்து, மத்திய அரசு அவரை பேச்சு வார்த்தைக்கு அழைத்தது. டெல்லியில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை பிமல் குருங் ஆதரவாளர்களான போராட்டக் குழு நிர்வாகிகள் சந்தித்து பேசினார்கள்.

    அப்போது கூர்காலாந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மேற்கு வங்க போலீசார் எடுத்த நடவடிக்கைகள், வழக்குகள் போன்றவற்றை கைவிடுவது, கூர்கா மக்களின் அடிப்படை உரிமைகள் போன்றவை பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் உடன்பாடு ஏற்பட்டது.

    இதையடுத்து, போராட்டத்தை கைவிடுவதாக போராட்ட குழு தலைவர் பிமல்குருங் அறிவித்தார். போராட்டம் முடிவுக்கு வந்ததாக 27-9-2017 அன்று  டார்ஜிலிங்கில் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 104 நாட்கள் நீடித்த தொடர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பிமல் குருங் மீது தீவிரவாத தடை சட்டம், சட்ட விரோத தடுப்பு சட்டம் போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவற்றை வாபஸ் பெற்றுக் கொள்வதாகவும் டார்ஜிலிங் மலை பகுதியில் உள்ள அமைப்புகளின் தலைவராக பிமல் குருங்கை அங்கீகரிப்பதாகவும் ராஜ்நாத்சிங் அறிவித்தார்.

    இந்நிலையில், டார்ஜீலிங் பகுதிக்கு பாதுகாப்பு பணிக்காக அனுப்பப்பட்ட 15 கம்பெனி துணை ராணுவப் படையினரை திரும்பப்பெற மத்திய உள்துறை அமைச்சகம் தீர்மானித்தது. முதல்கட்டமாக நேற்று (16-ம் தேதி) 10 கம்பனி படைகளையும், இரண்டாம்கட்டமாக மீதமுள்ள 5 கம்பனி படைகளை வரும் 20-ம் தேதியும் திரும்பப் பெறுவதாக உள்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் அறிவித்தது.

    இதையறிந்த மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி உடனடியாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை தொலைபேசியில் தொடர்புகொண்டார்.

    டார்ஜீலிங்கில் சகஜமான இயல்பு நிலை திரும்பும்வரை துணை ராணுவப் படையினரை திரும்பப்பெற வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார். மத்திய அரசின் இந்த முடிவு நாட்டின் கூட்டாட்சி முறைக்கு எதிராக உள்ளதாகவும் பின்னர் மம்தா குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், பத்துக்கு பதிலாக 7 துணை ராணுவப் படைகள் நேற்று திரும்பப் பெறப்பட்டன.

    இந்நிலையில், கொல்கத்தா ஐகோர்ட்டின் உத்தரவுப்படி, மாநில அரசுக்கு உதவுவதற்காக டார்ஜீலிங் பகுதிக்கு அனுப்பப்பட்ட துணை ராணுவப் படையினரை மாநில அரசுடன் கலந்தாலோசிக்காமல் திரும்பப் பெறும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து மேற்கு வங்காளம் மாநில அரசின் சார்பில் கொல்கத்தா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஹரிஷ் டான்டன் இவ்விவகாரம் தொடர்பாக வரும் 23-ம் தேதிக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டார். மேலும், இவ்வழக்கின் மறுவிசாரணை நடைபெறவுள்ள வரும் 27-ம் தேதிவரை டார்ஜீலிங் மற்றும் கலிம்போங் பகுதிகளில் இருந்து துணை ராணுவப் படைகள திரும்பப்பெற கூடாது எனவும் தடை விதித்துள்ளார்.

    Next Story
    ×