search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு நடந்து சென்ற முதல்-மந்திரி பினராயி விஜயன்.
    X
    பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு நடந்து சென்ற முதல்-மந்திரி பினராயி விஜயன்.

    சபரிமலையில் முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆய்வு

    சபரிமலையில் மகர விளக்கு பூஜையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்வதற்காக பம்பையிலிருந்து முதல் மந்திரி பினராயி விஜயன் நடந்தே சென்றார்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் வருகிற நவம்பர் மாதம் மண்டல பூஜை தொடங்க உள்ளது.

    இதில் நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க மண்டல பூஜை தொடங்கும் முன்பு சபரிமலையில் அதிகாரிகள் மற்றும் மந்திரிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை ஆலோசனை சபரிமலையில் இன்று நடந்தது. இதில் முதல்-மந்திரி பினராயி விஜயன் கலந்து கொண்டார். இதற்காக அவர் நேற்று மாலை சபரிமலை சென்றார்.

    அவருடன் தேவசம் போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் மற்றும் அதிகாரிகள் சென்றனர். இரவு 8.30 மணிக்கு பம்பை சென்றடைந்த அவர்கள், அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு சன்னிதானம் சென்றனர்.

    இதற்காக பம்பையில் இருந்து முதல்-மந்திரி பினராயி விஜயன் நடந்தே சென்றார். அங்கு அவரை திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரையர் கோபாலகிருஷ்ணன் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.

    கடந்த சில மாதங்களாக பிரையர் கோபால கிருஷ்ணனுக்கும் முதல்-மந்திரிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. ஆனால் அதனை மறந்து நேற்று இருவரும் சபரிமலை வளர்ச்சி பணிகள் குறித்து பேச்சு நடத்தினர்.

    இன்று காலை பம்பையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், சன்னிதானம் மற்றும் நிலக்கல்லில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடந்தது. இதில் தேவசம்போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன், ஏ.டி.ஜி.பி.மனோஜ் ஆபிரகாம், பிரையர் கோபாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இக்கூட்டம் முடிந்த பின்னர் பினராயி விஜயன் சபரிமலையில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை பார்வையிடுகிறார்.

    சபரிமலையில் ஐப்பசி மாத பூஜைகளுக்காக நேற்று கோவில் நடை திறக்கப்பட்டது. இன்று காலை முதல் அங்கு பூஜைகள் நடந்தன. இன்று முதல் 5 நாட்கள் நடை திறந்திருக்கும். வருகிற 21-ந் தேதி நடை அடைக்கப்படும்.


    Next Story
    ×