search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆருஷி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட பெற்றோர் சிறையில் இருந்து விடுதலை
    X

    ஆருஷி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட பெற்றோர் சிறையில் இருந்து விடுதலை

    கவுரவ கொலையாக பார்க்கப்பட்ட 14 வயது சிறுமி ஆருஷி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பெற்றோர் தல்வார் தம்பதியர் இன்று சிறையில் இருந்து விடுதலை ஆகினர்.
    லக்னோ:

    நொய்டாவில் பல் மருத்துவர்களாக ராஜேஷ் தல்வார் மற்றும் நுபுர் தல்வார் பணிபுரிந்து வந்தனர். இவர்களுடைய ஒரே மகள் ஆருஷி (வயது 14). இவர் டெல்லியில் உள்ள பள்ளியில் படித்துவந்தார். அவரது வீட்டில் ஹேமராஜ் (45) என்பவர் பணிபுரிந்து வந்தார். கடந்த 2008-ஆம் ஆண்டு மே 15-ஆம் தேதி நள்ளிரவில் ஆருஷியும், ஹேமராஜும் கொலை செய்யப்பட்டனர்.

    நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த இரட்டை கொலை வழக்கில், ராஜேஷ் தல்வார், நுபுர் தல்வார் ஆகிய இருவரையும் குற்றவாளிகள் என்று அறிவித்த காஜியாபாத் சி.பி.ஐ. நீதிமன்றம், அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. காசியாபாத்தில் உள்ள தாஸ்னா சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆருஷியின் பெற்றோர் இந்த தீர்ப்பை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.

    அந்த மனு மீது கடந்த வியாழக்கிழமை தீர்ப்பளித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆதாரங்களை அடிப்படையாக வைத்து ஆருஷியின் பெற்றோரைக் குற்றவாளிகளாக அறிவிக்க முடியாது. எனவே, தல்வார் தம்பதியரை விடுவிக்கிறோம் என்று தெரிவித்தது.  

    அவர்களுக்கு தண்டனை விதித்த சி.பி.ஐ. நீதிமன்றம்தான் விடுதலைக்கான உத்தரவை அளிக்க வேண்டும் என்பது நடைமுறை. அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவு நகல் உடனடியாக கிடைக்காததால் வெள்ளி, சனிக்கிழமைகளில் ஆருஷியின் பெற்றோர்கள் விடுவிக்கப்படவில்லை.


    இன்று உத்தரவு நகல் கிடைத்ததும் சிறையில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகின. இதனால், காசியாபாத், தாஸ்னா பகுதியில் உள்ள சிறைச்சாலையின் முன்னால் இன்று காலையில் இருந்து ஏராளமான செய்தியாளர்கள் குவிந்திருந்தனர்.

    இந்த நிலையில், இன்று மாலை சுமார் 5 மணியளவில் ராஜேஷ் தல்வார் மற்றும் நுபுர் தல்வார் சிறையில் இருந்து வெளியே வந்தனர்.

    தல்வார் தம்பதியர் சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்னர் வரை நொய்டா நகரில் உள்ள ஜல்வாயு விஹார் அடுக்குமாடி குடியிருப்பில் எல்-32-ம் எண் கொண்ட வீட்டில் வாழ்ந்து வந்தனர். அந்த வீட்டில்தான் ஆருஷி மற்றும் ஹேமராஜின் பிரேதங்கள் மீட்கப்பட்டன. ஆருஷியின் பெற்றோர் சிறைக்கு சென்ற பின்னர் காலியாக இருந்த அந்த வீட்டில் தற்போது ஒரு குடும்பம் வசித்து வருகிறது.

    எனவே, இன்று விடுதலையான ஆருஷியின் பெற்றோர் நொய்டா நகரில் உள்ள ஜல்வாயு விஹார் அடுக்குமாடி குடியிருப்பில் நுபுர் தல்வாரின் தந்தையும் ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியுமான பி.ஜி.சிட்னிஸ் என்பவருக்கு சொந்தமான வீட்டில் குடியேறுகிறார்கள்.

    தாஸ்னா சிறையில் தல்வார் தம்பதிகள் கைதிகளுக்கு இலவசமாக மருத்துவ பணிகளை செய்ததாகவும், இந்த வேலைக்காக அவர்களுக்கு சேர வேண்டிய சம்பளத் தொகையான சுமார் 50 ஆயிரம் ரூபாயை பெற்றுகொள்ள அவர்கள் மறுத்து விட்டதாகவும் சிறைத்துறை அதிகாரி டி. மயூரா தெரிவித்தார்.  மேலும், சிறையிலிருந்து விடுதலையான பின்னரும் அடிக்கடி சிறைக்கு வந்து அங்குள்ள கைதிகளுக்கு சிகிச்சை அளிக்க அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×