search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாஜ்மகால் துரோகிகளால் கட்டப்பட்டது: பா.ஜனதா எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு
    X

    தாஜ்மகால் துரோகிகளால் கட்டப்பட்டது: பா.ஜனதா எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு

    தாஜ்மகால் துரோகிகளால் கட்டப்பட்டது என்ற உத்தரபிரதேச பா.ஜனதா எம்.எல்.ஏ. சங்கீத்சாம் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
    லக்னோ:

    உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் இந்தியாவில் சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் பார்க்கும் இடமாக உள்ளது. தாஜ்மகால் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் அமைந்துள்ளது.

    சமீபத்தில் உத்தரபிரதேச மாநில முக்கிய சுற்றுலா பட்டியல் அடங்கிய புத்தகம் ஒன்று அரசு சார்பில் வெளியிடப்பட்டது. அதில் தாஜ்மகால் இடம்பெறவில்லை.

    உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் சில மாதங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டினருக்கு தாஜ்மகால் வடிவங்களை பரிசு பொருளாக கொடுக்கிறார்கள். தாஜ்மகால் இந்திய கலாச்சாரத்தின் சின்னமல்ல. ராமாயணம், மகாபாரதம் தான் இந்தியாவின் கலாச்சாரம் என்று கூறினார். இந்த நிலையில் தான் சுற்றுலா பட்டியலில் தாஜ்மகால் பெயர் நீக்கப்பட்டிருந்தது.

    இதற்கிடையே தாஜ்மகால் குறித்து உத்தரபிரதேச பா.ஜனதா எம்.எல்.ஏ. சங்கீத்சாம் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியிருக்கிறார். சிசோலி என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது கூறியதாவது:-

    தாஜ்மகால் இந்தியாவின் வரலாற்று சின்னம் என்று கூறுவது தவறு. அது இந்திய வரலாற்றின் களங்கமாக அமைந்துள்ளது. இந்த கட்டிடம் ஷாஜகானால் கட்டப்பட்டுள்ளது. ஷாஜகான் தனது சொந்த தந்தையையே ஜெயிலில் அடைத்தவர். அதாவது துரோகிகளால் தாஜ்மகால் கட்டப்பட்டு இருக்கிறது. இதை இந்திய வரலாற்று சின்னமாகவோ, நினைவு சின்னமாகவோ ஏற்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பா.ஜனதா எம்.எல்.ஏ.வின் இந்த பேச்சு குறித்து பா.ஜனதா தரப்பில் கருத்துகளை அறிவதற்காக செய்தி தொடர்பாளர்களுடன் தொடர்பு கொண்டபோது அவர்கள் பதில் சொல்ல மறுத்துவிட்டனர்.

    Next Story
    ×