search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான 6 பேரை படத்தில் காணலாம்.
    X
    கைதான 6 பேரை படத்தில் காணலாம்.

    சொத்துக்காக தந்தையை கூலிப்படை ஏவி கொன்ற மகன்

    திருப்பதியில் சொத்துக்காக தந்தையை கூலிப்படை ஏவி மகனே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    திருப்பதி:

    திருப்பதியில் ராவூரி சத்யநாராயணா என்பவர் தங்கும் விடுதி நடத்தி வந்தார். அவர் கடந்த 9-ந்தேதி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இது குறித்து அவரது உறவினர் திருப்பதி கிழக்கு போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    முதலில் தொழில் போட்டி காரணமாக ராவூரி சத்யநாராயணா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கருதி விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் அதில் எந்த முன்னேற்றமும் இல்லை. கொலை செய்யப்பட்ட இவருக்கு அதிக அளவில் சொத்துகள் உள்ளன. எனவே சொத்துக்காக இவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து குடும்ப உறுப்பினர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் ராவூரி சத்யநாராயணாவை அவரது மூத்த மகன் ராவூரி சிந்து என்பவர் சொத்துகளை அபகரிப்பதற்காக கொலை செய்த அதிர்ச்சி தகவல் வெளிவந்தது. இது குறித்து அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் பரபரப்பான தகவல் கிடைத்தன.

    ராவூரி சிந்து, ஸ்டே‌ஷனரி பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவர் தந்தை ராவூரி சத்யநாராயணாவிடம் கடந்த ஒரு வருடமாகவே சொத்துகளை பிரித்து தருமாறு கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். தனது கடைக்காக கடனும் அதிக அளவில் வாங்கியிருந்ததால் வட்டி கூட செலுத்த முடியவில்லை.

    இதனால் தந்தையை கொன்று விட்டால் முழு சொத்தையும் அனுபவிக்கலாம் என கருதினார். இந்த நிலையில் உடற்பயிற்சி மையத்துக்கு சென்றபோது பழக்கமான நண்பர் தினேசை, ராவூரி சிந்து அணுகினார். அவரிடம் தனது தந்தையை கொலை செய்யுமாறு கூறி அதற்கு பதிலாக ரூ.5 லட்சத்தில் ஒரு துணிக்கடை வைத்து தருவதாக கூறியுள்ளார்.

    அதனையடுத்து தினேஷ் தனது நண்பன் சாயிகிரனிடம் வி‌ஷயத்தை கூறி ராவூரி சத்யநாராயணாவை கொலை செய்ய ரூ.3 லட்சம் தருவதாகவும் திட்டத்தை நிறைவேற்றும்படியும் கூறியுள்ளார்.

    இதனை தொடர்ந்து சாயிகிரண் தனது நண்பர்களான கணேஷ், ஹேமந்த், லோகேஷ் ஆகியோருடன் சென்றார். அப்போது சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ராவூரி சத்யநாராயணாவை அவர்கள் கத்தியால் குத்தி கொலை செய்தனர்.

    மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து ராவூரி சிந்து, தினேஷ், சாயிகிரண், கணேஷ், ஹேமந்த், லோகேஷ் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×