search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புளூவேல் விளையாட்டை தடுக்க என்ன வழி?: மத்திய அரசு ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவு
    X

    புளூவேல் விளையாட்டை தடுக்க என்ன வழி?: மத்திய அரசு ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவு

    புளூவேல் விளையாட்டால் உயிர்கள் பறிபோவதை தவிர்க்க என்ன வழி? என்று ஆய்வு செய்து இணையதளங்களை கண்காணிக்கும் தடுப்பான் அமைப்பை உருவாக்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    தற்கொலை விளையாட்டு என்ற பெயர் பெற்றுள்ள புளூ வேல் (நீல திமிங்கலம்) எனும் ஆன்லைன் கேம், விளையாடுபவருக்கு தினசரி ஒரு பணி என மொத்தம் 50 நாட்கள் வழங்கப்படும். இதன் இறுதி பணி கேமினை விளையாடுவோரை தற்கொலை செய்ய வைக்கிறது. ஒவ்வொரு நாளும் சவாலை முடித்ததும் கேமினை விளையாடுபவர் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    இணையத்தில் இதுபோன்ற ஆபத்தான கேம்கள் சமூக வலைதள உதவியின்றி விளையாட முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டு இருப்பதால் பலரும் இந்த கேம் விளையாட துவங்கி, இறுதியில் தற்கொலை செய்து கொள்ளும் அவலம் ஏற்படுகிறது. சமீபகாலமாக இந்தியாவிலும் புளூ வேல் இளம் உயிர்களை பறித்து வருகிறது.

    புளூ வேல் ஆபத்தை உணர்ந்து இந்தியாவில் இந்த விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புளூ வேல் விளையாட்டுக்கு அழைத்து செல்லும் அனைத்து ‘ஆப்ஸ்’களையும் தடை செய்யுமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களை இந்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை உத்தரவிட்டுள்ளது.

    எனினும், புளூ வேல் மோகம் நமது மாணவர்கள் மற்றும் இளைய சமுதாயத்தினரிடையே தீராத தாகத்தையும் மோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசால் தடை செய்யப்பட்டிருந்தாலும் இந்த ஆன்லைன் விளையாட்டு இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பிற ஆப்களின் மூலம் ரகசியமாக விளையாடப்பட்டு வருவதாக தெரிகிறது.

    இளைஞர்களை தற்கொலைக்கு தூண்டும் ‘புளூ வேல்’ விளையாட்டுக்கு மத்திய அரசு தடை விதிக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் என்.எஸ்.பொன்னையா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த மாதம் மனு தாக்கல் செய்தார்.

    சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ,எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரை கொண்ட அமர்வின் முன் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

    புளூவேல் விளையாட்டை தடை செய்யும் ‘பயர்வால்’ (பயனாளிகளின் இணைய நடமாட்டத்தின் இடையில் வரும் விரும்பத்தகாத இணைப்புகளை கண்காணித்து தவிர்க்கும் தடுப்பான் அமைப்பு) ஒன்றை உருவாக்குவது தொடர்பாக வல்லுனர்கள் குழுவை ஏற்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்யுமாறு மத்திய அரசை நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    மேலும், புளூவேல் விபரீதங்கள் தொடர்பான இதர மனுக்களை மாநில ஐகோர்ட்கள் அனுமதிக்க கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளனர்.
    Next Story
    ×