search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பட்டினியால் வாடுபவர்களில் இந்தியாவுக்கு 100-வது இடம்
    X

    பட்டினியால் வாடுபவர்களில் இந்தியாவுக்கு 100-வது இடம்

    இந்தியா பட்டினியால் வாடுபவர்களின் பட்டியலில் 100-வது இடத்துக்கு சென்றுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தியா மேலும் 3 இடங்கள் பின் தங்கியுள்ளது.
    புதுடெல்லி:

    உலக அளவில் 119 நாடுகள் வளர்ந்து வரும் நாடுகள் பட்டியலில் உள்ளன.

    இந்த நாடுகளில் பெரும்பாலானவற்றில் உணவு தானியங்கள் உற்பத்தி குறைவு காரணமாக மக்கள் பட்டினி கிடக்கும் நிலை உள்ளது.

    சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி கழகம் இது தொடர்பாக 119 நாடுகளிலும் ஒரு ஆய்வை நடத்தியது. அதன் அடிப்படையில் அதிக மக்கள் பட்டினி கிடக்கும் நாடுகளை பட்டியலிட்டு வரிசைப்படுத்தியுள்ளது. இந்த பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

    இந்த ஆய்வுப்படி இந்தியாவில் பட்டினியாக கிடப்பவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. பட்டினியாக கிடப்பவர்கள் எண்ணிக்கையில் இந்தியா கடந்த ஆண்டு 97-வது இடத்தில் இருந்தது.

    தற்போது வெளியிட்டுள்ள பட்டியலின்படி இந்தியா, பட்டினியால் வாடுபவர்களின் பட்டியலில் 100-வது இடத்துக்கு சென்றுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தியா மேலும் 3 இடங்கள் பின் தங்கியுள்ளது. இதன் மூலம் ஆசிய கண்டத்தில் இந்தியா அதிக பட்டினியாளர்களைக் கொண்டதாக இருப்பது தெரிய வந்துள்ளது.

    இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா, இலங்கை, நேபாளம், மியான்மர், வங்கதேசம் ஆகியவை இந்தியாவை விட குறைவான சராசரி பட்டினியாளர்களைக் கொண்டுள்ளது. அந்த ஆய்வு பட்டியல் படி சீனா 29-வது இடத்திலும், நேபாளம் 72, மியான்மர் 77, இலங்கை 84, வங்கதேசம் 88-வது இடங்களில் உள்ளன.

    பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் மட்டுமே இந்தியாவையும் விட பின்னால் உள்ளன. பாகிஸ்தான் 107-வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 108-வது இடத்திலும் இருக்கின்றன.

    Next Story
    ×