search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜின் ஜாமீனை ரத்து செய்து சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு
    X

    கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜின் ஜாமீனை ரத்து செய்து சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு

    கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை சுப்ரீம் கோர்ட்டு நேற்று ரத்து செய்தது.
    புதுடெல்லி:

    கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை சுப்ரீம் கோர்ட்டு நேற்று ரத்து செய்தது.

    சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ். என்ஜினீயரான இவர், திருச்செங்கோட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்தார். கடந்த 2015-ம் ஆண்டு அந்த பெண்ணுடன், கோகுல்ராஜ் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றபோது, அவரை ஒரு கும்பல் கடத்தி கொலை செய்தது.

    இதுகுறித்து திருச்செங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீரன் சின்னமலை பேரவையின் தலைவர் யுவராஜ் உள்பட பலரை கைது செய்தனர். இதற்கிடையே கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் யுவராஜ் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு அவருக்கு நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

    இதனை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு வழங்கிய ஜாமீனுக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

    இதனையடுத்து யுவராஜ் தரப்பில் பதில் மனுவும், தமிழக அரசு தரப்பில் எதிர் பதில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது யுவராஜ் தரப்பில் வக்கீல் பஸந்த்தும், தமிழக அரசு தரப்பில் அரசு வக்கீல் யோகேஷ் கன்னாவும் வாதாடினர்.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சென்னை ஐகோர்ட்டு யுவராஜுக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்வதாகவும், கீழமை கோர்ட்டு இந்த வழக்கை 18 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.

    Next Story
    ×