search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேசும் பிரதமரை நாங்கள் கொடுத்துள்ளோம்: அமித் ஷா பேச்சு
    X

    பேசும் பிரதமரை நாங்கள் கொடுத்துள்ளோம்: அமித் ஷா பேச்சு

    பா.ஜ.க. என்ன செய்துள்ளது? என்ற ராகுல் காந்தியின் கேள்விக்கு 'பேசக்கூடிய பிரதமரை நாங்கள் கொடுத்துள்ளோம்’ என அமித் ஷா பதில் அளித்துள்ளார்.
    லக்னோ:

    பா.ஜ.க. தலைவர் அமித் ஷா இன்று உத்தரப்பிரதேசம் மாநில தலைநகர் லக்னோவில் அக்கட்சியின் முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி. தொகுதியான அமேதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    குஜராத் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என ராகுல் காந்தி கேலி செய்து வருகிறார். காங்கிரஸ் கட்சியின் இளவரசரான ராகுல் காந்தியின் தொகுதியான அமேதிக்கு கடந்த மூன்று தலைமுறைகளாக காங்கிரஸ் கட்சி செய்தது என்ன? என அவரை நான் கேட்க விரும்புகிறேன்.

    எங்களது மூன்றாண்டு ஆட்சியை கேள்வி கேட்கும் நீங்கள் உங்களது மூன்று தலைமுறை ஆட்சியில் செய்த நன்மைகளை மக்களிடம் முதலில் கூறுங்கள். நாங்கள் பேசக்கூடிய பிரதமரை கொடுத்துள்ளோம்.

    இந்த நாட்டை 70 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி ஆண்டது. அமேதியின் எம்.பி.யாக நீங்கள் நீண்டகாலமாக பதவி வகித்தும் இங்கு கலெக்டர் அலுவலகம் வரவில்லை. டி.பி. மருத்துவமனை, எப்.எம். வானொலி நிலையம் போன்றவை வரவில்லை. கோமதி ஆற்றங்கரையில் மண் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. நேரு பாணி - மோடி பாணி என இரண்டு பாணியான வளர்ச்சி திட்டங்கள் இங்குள்ளன.

    இங்குள்ள மக்கள் கடந்த 60 ஆண்டுகளாக ஒரு குடும்பத்தை நம்பி இருந்து வந்தீர்கள். இப்போது நீங்கள் மோடியை நம்பினால் உங்களை அவர் கைவிட மாட்டார்.

    எம்.பி. தேர்தலில் நின்று ஜெயித்தவர் தொகுதியில் காணாமல் போனதையும், அவரை எதிர்த்து தோற்ற வேட்பாளர் (ஸ்மிரிதி இரானி) தொகுதி மக்களுக்காக உழைப்பதையும் கடந்த 35-40 ஆண்டுகளில் முதன்முறையாக நான் பார்க்கிறேன். ஸ்மிரிதி இரானி முயற்சியால் இங்கு பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கடந்த மூன்றாண்டுகளில் 106 திட்டங்களை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இங்கு நிறைவேற்றியுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×