search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஜராத்தில் பெட்ரோல், டீசல் மீதான வாட்வரி 4 சதவீதம் குறைப்பு: முதல்-மந்திரி அறிவிப்பு
    X

    குஜராத்தில் பெட்ரோல், டீசல் மீதான வாட்வரி 4 சதவீதம் குறைப்பு: முதல்-மந்திரி அறிவிப்பு

    மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் குஜராத் மாநிலத்தில் இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் மீதான வாட்வரி 4 சதவீதம் குறைக்கப்படும் என்று முதல்-மந்திரி விஜய்ருபானி தெரிவித்தார்.
    காந்திநகர்:

    மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதத்துக்கு 2 முறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட இந்த நடைமுறை கடந்த ஜூன் மாதம் கைவிடப்பட்டது.

    அதன்பின்னர் பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்படும் முறை அமுலுக்கு வந்தது. இந்த புதிய நடைமுறை காரணமாக கடந்த 3 மாதங்களில் இந்த எரிபொருட்களின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வந்தது.

    எனவே பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதைதொடர்ந்து பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.2 குறைத்து மத்திய அரசு இந்த மாத தொடக்கத்தில் அறிவித்தது.

    இந்த நிலையில் பெட்ரோல், டீசல் மீதான வாட்வரியை 5 சதவீதம் குறைக்க வேண்டும் என்று மாநில அரசுகளை பெட்ரோலிய துறை மந்திரி தர்மேந்திர பிரதான் வலியுறுத்தி வந்தார். அவ்வாறு செய்தால்தான் பொதுமக்கள் மேலும் பயன்பெறுவார்கள் என்று கூறியிருந்தார்.

    இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் பெட்ரோல், டீசல் மீதான வாட்வரி 4 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதை அம்மாநில முதல்-மந்திரி விஜய்ருபானி இன்று அறிவித்தார்.

    இதுதொடர்பாக அவர் கூறும்போது மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் பெட்ரோல், டீசல் மீதான வாட்வரி 4 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் இது அமலுக்கு வரும். இதனால் மாநில அரசுக்கு ஆண்டுமுதல் ரூ. 2316 கோடி இழப்பு ஏற்படும். ஆனாலும் மக்களின் நலனுக்காக இந்த முடிவை எடுத்துள்ளோம் என்றார்.

    வாட்வரி 4 சதவீதம் குறைக்கப்பட்டதால் குஜராத்தில் பெட்ரோல் லிட்டருக்கு விலையில் ரூ.2.93-ம், டீசல் லிட்டருக்கு விலையில் ரூ. 2.72-ம் குறையும். அங்கு இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் ரூ.66.53-க்கும், டீசல் ரூ.60.77-க்கும் விற்பனை செய்யப்படும்.

    குஜராத் மாநிலத்தில் டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது. தேர்தலை கருத்தில் கொண்டு மாநில பா.ஜனதா அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
    Next Story
    ×