search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாவிட்டால் சிறை: வைரலாக பரவும் உ.பி. மந்திரியின் சர்ச்சை பேச்சு
    X

    குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாவிட்டால் சிறை: வைரலாக பரவும் உ.பி. மந்திரியின் சர்ச்சை பேச்சு

    குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்ற உ.பி., மந்திரியின் சர்ச்சை பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    லக்னோ:

    குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்ற உ.பி., மந்திரியின் சர்ச்சை பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மந்திரியாக இருந்து வருபவர் ஓம்பிரகாஷ் ராஜ்பர். இவர் சமீபத்தில் ரஸ்தா பகுதியில் நடந்த கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:
     
    நான் சட்டத்தை எனது விருப்பப்படி மாற்றப் போகிறேன். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்கள் கைது செய்யப்படுவார்கள். முதலில் அவர்கள் போலீஸ் ஸ்டேஷனில் 5 நாட்கள் அடைக்கப்படுவார்கள். அங்கு அவர்களுக்கு உணவும், தண்ணீரும் வழங்கப்படாது. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாவிட்டால் பெற்றோர்கள் சிறைக்கு செல்லும் நிலை ஏற்படும்.

    அப்படியும் குழந்தைகளை படிக்க அனுப்பவில்லை என்றால், பெற்றோர்கள் 6 மாதம் வரை சிறையில் அடைக்கப்படுவார்கள். குழந்தைகளை படிப்பதற்காக பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்களுக்கு தண்டனை வழங்கவும் நான் தயாராக இருக்கிறேன் என ஆவேசமாக கூறினார்.

    சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மந்திரியின் பேச்சு தொடர்பான வீடியோ காட்சிகள் அங்குள்ள சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் மந்திரியின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    இதுதொடர்பாக கருத்து கூறிய ராஜ்பர், நான் சொன்ன வார்த்தையில் என்ன தவறு இருக்கிறது. ஏழை குழந்தைகளின் கல்விக்காக மாநில அரசு பல்வேறு விதமான ஏற்பாடுகளை செய்து கொடுத்து வருகிறது. ஆனாலும் அவர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில்லை. இதுகுறித்து முதல்வரிடம் பேசவுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

    உத்தரப்பிரதேசம் மாநில அமைச்சரின் சர்ச்சை பேச்சால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×