search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசியல் காரணங்களுக்காக வன்முறையில் ஈடுபடுவது கம்யூனிஸ்டுகளின் இயல்பு: அமித்ஷா
    X

    அரசியல் காரணங்களுக்காக வன்முறையில் ஈடுபடுவது கம்யூனிஸ்டுகளின் இயல்பு: அமித்ஷா

    டெல்லியில் நடைபெற்ற பா.ஜ.க. மக்கள் யாத்திரையில் பங்கேற்ற் கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, அரசியல் காரணங்களுக்காக வன்முறையில் ஈடுபடுவது கம்யூனிஸ்டுகளின் இயல்பு என பேசியுள்ளார்.
    புதுடெல்லி:

    தென்மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கை உயர்த்த கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    அதன் ஒரு பகுதியாக, கடந்த 2-ம் தேதி கேரள மாநிலத்தில் நடைபெற்ற பா.ஜ.க மக்கள் யாத்திரையை கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா கொடியசைத்து தொடங்கி வைத்தார். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், முதல்-மந்திரியுமான பினராயி விஜயனின் சொந்த ஊரான பையனூரில் இருந்து தொடங்கப்பட்டது. இந்த யாத்திரை வரும் 17-ம் தேதி திருவனந்தபுரத்தில் நிறைவடைய உள்ளது.

    இந்நிலையில், டெல்லி கன்னாட்பிளேசில் அமைந்துள்ள சி.பி.ஐ.எம் அலுவலகம் அருகில் நடைபெற்ற மக்கள் யாத்திரையில் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    இடதுசாரிகள் ஆட்சி செய்யும் கேரளாவில் தாமரை மலர்வதை யாராலும் தடுக்க முடியாது. இதற்காக அவர்கள் எந்த முயற்சி செய்தாலும் அது வீணாகவே முடியும்.

    கேரளாவில் இடதுசாரிகள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் அதிகளவில் கொல்லப்பட்டு வருகின்றனர். உடலின் பாகங்களை சிதைத்து மிக கொடூரமான முறையில் கொல்லப்பட்டு வருகின்றனர். ஆனாலும், கேரளாவில் கட்சி நன்கு வளர்ச்சி அடைந்து வருகிறது. விரைவில் தாமரை மலரும்.



    அரசியல் காரணங்களுக்காக வன்முறையில் ஈடுபடுவது கம்யூனிஸ்டுகளின் இயல்பாகும். மேற்கு வங்காளம், திரிபுரா மற்றும் கேரளாவில் கம்யூனிஸ்டுகள் நீண்ட நாட்களாக ஆட்சியில் இருந்து வருகின்றனர். அவர்கள் எங்கெல்லாம் ஆட்சியில் இருக்கின்றனரோ அங்கெல்லாம் அரசியலுக்காக வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் சாம்பியன்கள், அவர்களது மாநிலங்களில் நடக்கும் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக எந்த கருத்துக்களையும் தெரிவிக்காமல் மவுனமாக இருந்து வருகின்றனர். இடதுசாரிகளின் அட்டூழியத்தை கண்டித்து அவர்கள் இந்தியா கேட்டில் ஏன் பேரணி நடத்துவதில்லை?

    இனியாவது அவர்கள் தங்கள் வன்முறையை தூண்டும் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும். சிறந்து விளங்கும் முக்கியமான 10 தலைவர்கள் மற்றும் 11 கோடி தொண்டர்களை கொண்டு, உலகின் மிகப் பெரிய கட்சியாக பா.ஜ.க. விளங்கி வருகிறது.  

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×