search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஜராத்தில் பெட்ரோல் - டீசலுக்கு ‘வாட்’வரி ரத்து - தமிழக அரசு மறுப்பு
    X

    குஜராத்தில் பெட்ரோல் - டீசலுக்கு ‘வாட்’வரி ரத்து - தமிழக அரசு மறுப்பு

    குஜராத் மாநிலத்தில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு ரத்து செய்ய மறுத்துள்ளது.
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையான ஜி.எஸ்.டி. வரி கடந்த ஜூலை மாதம் 1-ந்தேதி அறிமுகம் செய்யப்பட்டது.

    ஆனால் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு வரம்புக்குள் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோல்-டீசல் ஆகியவை கொண்டு வரப்படவில்லை. அவை மீது பழைய முறையிலான விற்பனை வரி, வாட் வரி ஆகியவை விதிக்கப்படுகின்றன.

    இத்தகைய மாறுபட்ட வரி விதிப்பு காரணமாக இயற்கை எரிவாயு, பெட்ரோல், டீசலை பயன்படுத்தும் தொழில் நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வாட் வரியை கட்டி விட்டு, ஏற்கனவே எரிபொருள்களுக்கு என கட்டிய வரியை இந்த தொழில் நிறுவனங்களால் திரும்பப் பெற இயலாத சூழ்நிலை நிலவுகிறது.

    இதன் காரணமாக இந்த நிறுவனங்களின் உற்பத்தி பொருட்கள் விலை உயர்கிறது. அதோடு விலைகளில் வேறுபாடு காணப்படுகிறது. இதற்கு தீர்வு காண வேண்டுமானால் மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான 5 சதவீத வாட் வரி விதிப்பை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதினார்.

    பெட்ரோல், டீசல் மீது தற்போது மத்திய அரசு 23 சதவீதமும் மாநில அரசுகள் 34 சதவீதம் வரையும் வரி விதிப்பு செய்துள்ளன. மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று பா.ஜனதா கட்சி ஆட்சி நடக்கும் மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை விலக்கிக் கொள்ள முன் வந்துள்ளன.

    அதன்படி குஜராத் மாநில அரசு முதல் மாநிலமாக பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியில் 5 சதவீதத்தை ரத்து செய்து அறிவித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

    குஜராத் மாநிலத்தைத் தொடர்ந்து பா.ஜ.க. ஆட்சி நடக்கும் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், உத்தரகாண்ட், ஜார்க்கண்ட் மாநிலங்களும் வாட் வரியில் 5 சதவீதத்தை குறைத்து கொள்ள முன் வந்துள்ளன. மத்திய பிரதேச மாநில அரசு தன் மாநில மக்களுக்கு தீபாவளி பரிசாக வாட் வரி நீக்கத்தை அறிவிக்கும் என்று அம்மாநில முதல்வர் சிவராஜ் சவுகான் சூசகமாக தெரிவித்துள்ளார்.

    என்றாலும் பா.ஜ.க. ஆட்சி நடக்கும் அரியானா, அசாம் மாநில அரசுகள் வாட் வரியை 5 சதவீதம் ரத்து செய்தால் கணிசமான வருவாய் இழப்பு ஏற்படும் என்று பயப்படுகின்றன. எனவே பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை ரத்து செய்ய அம்மாநில அரசுகள் தயக்கம் தெரிவித்துள்ளன.

    தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் மீது இந்த ஆண்டு தொடக்கத்தில் 27 சதவீதம் வரி விதிப்பு இருந்தது. கடந்த மார்ச் மாதம் வாட் வரி 27 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்த வரி விதிப்பை குறைக்க இயலாது என்று தமிழக அரசு மறைமுகமாக உணர்த்தியுள்ளது.

    அது போல கேரளா, பஞ்சாப், ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களும் வாட் வரி விதிப்பில் 5 சதவீதத்தை திரும்பப் பெற இயலாது என்று அறிவித்துள்ளன. எனவே பெரும்பாலான மாநிலங்கள் வாட் வரியில் 5 சதவீதத்தை ரத்து செய்ய விரும்பவில்லை என்று தெரிய வந்துள்ளது.

    Next Story
    ×