search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அடுத்த ஆண்டில் ஒரே நேரத்தில் பாராளுமன்றம்-சட்டசபைக்கு தேர்தல் நடத்த தயார்: தலைமை தேர்தல் கமி‌ஷன்
    X

    அடுத்த ஆண்டில் ஒரே நேரத்தில் பாராளுமன்றம்-சட்டசபைக்கு தேர்தல் நடத்த தயார்: தலைமை தேர்தல் கமி‌ஷன்

    அடுத்த ஆண்டில் பாராளுமன்றத்துக்கும், சட்ட சபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தயாராக இருப்பதாக டெல்லி தலைமை தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.

    பிரதமர் மோடி பதவி ஏற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. அடுத்து 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது.

    இதற்கிடையே தேர்தல் செலவை குறைக்க பாராளுமன்றத்துக்கும் மாநில சட்ட சபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது. பல்வேறு கருத்தரங்குகளில் இது தொடர்பாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    பா.ஜனதாவும் ஒரே சமயத்தில் பாராளுமன்றத்துக்கும், சட்டசபைக்கும் தேர்தல் நடத்துவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. பா.ஜனதா தலைவர் அமித்ஷா வெளிப்படையாகவே இந்த கருத்தை வலியுறுத்தினார். இது தொடர்பாக தேர்தல் கமி‌ஷன் கருத்தை மத்திய அரசு கேட்டு இருக்கிறது.



    இந்த நிலையில் டெல்லி தலைமை தேர்தல் கமி‌ஷனர் ஓ.பி, ரவத் பாராளுமன்றத்துக்கும், சட்ட சபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தயாராக இருக்கிறோம் என்று அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதமே தேர்தல் நடத்துவதற்கு தயாராக இருக்கிறோம் என்றும் கூறினார்.

    மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இணையதளம் மூலம் வாக்காளர் பெயரை பதிவு செய்யும் திட்டத்தை தேர்தல் கமி‌ஷனர் ரவத் தொடங்கிவைத்தார்.

    பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது பாராளுமன்றத்துக்கும் சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தேர்தல் கமி‌ஷன் தயாராக இருப்பதாக தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

    பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவது தொடர்பாக தேர்தல் கமி‌ஷன் தயாராக இருக்குமாறு மத்திய அரசு தெரிவித்து இருந்தது. இதையடுத்து தேர்தல் கமி‌ஷன் புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாங்குவதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம்.

    ஏற்கனவே ஓட்டுப்பதிவு எந்திரங்களுக்கு ஆர்டர் கொடுத்து விட்டோம். மத்திய அரசு நிதி ஒதுக்கியதும் எந்திரங்கள் கிடைத்து விடும். அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் 40 லட்சம் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களை தேர்தல் கமி‌ஷன் பெற்று விடும். அதன் பிறகு எந்த நேரத்திலும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தும் வகையில் தயாராக இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாராளுமன்ற தேர்தல் 2019-ம் ஆண்டுதான் நடத்தப்பட வேண்டும். ஆனால் தேர்தல் கமி‌ஷன் 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதமே தேர்தல் நடத்த தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளது. முன் கூட்டியே தேர்தல் நடத்தும் எண்ணத்துடனேயே எற்பாடுகளை தொடங்குமாறு தேர்தல் கமி‌ஷனை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிய வருகிறது. எனவே முன் கூட்டியே பாராளுமன்ற தேர்தல் வரலாம் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் முன் கூட்டியே நடத்தப்பட்டால் மற்ற மாநிலங்களுடன் சேர்ந்து தமிழக சட்டசபை தேர்தலும் நடத்தப்படும். தமிழக சட்ட சபைக்கு கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் தான் தேர்தல் நடந்தது. ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் அடுத்த ஆண்டு தேர்தலை சந்திக்கும் நிலை ஏற்படும்.
    Next Story
    ×