search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாடு முழுவதும் 9-ந் தேதி முதல் 2 நாட்கள் லாரிகள் வேலைநிறுத்தம்
    X

    நாடு முழுவதும் 9-ந் தேதி முதல் 2 நாட்கள் லாரிகள் வேலைநிறுத்தம்

    ஜி.எஸ்.டி. வரி, டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வருகிற 9 மற்றும் 10-ந் தேதிகளில் வேலைநிறுத்தம் செய்வது என்று அகில இந்திய லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
    புதுடெல்லி:

    ஜி.எஸ்.டி. வரி, டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வருகிற 9 மற்றும் 10-ந் தேதிகளில் வேலைநிறுத்தம் செய்வது என்று அகில இந்திய லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    அகில இந்திய மோட்டார் போக்குவரத்து மகாசபை சார்பில் பல்வேறு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.

    இதில் மோட்டார் போக்குவரத்து மகாசபை தலைவர் எஸ்.கே.மிட்டல், நிர்வாகிகள் குல்தரன்சிங் அத்வால், ரஜீந்தர் சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, டீசல் விலை உயர்வு போன்றவற்றுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் 2 நாட்கள் வேலை நிறுத்தம் செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது.

    இதுபற்றி சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

    ஒரே தேசம் ஒரே வரி என்ற அடிப்படையில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அரசின் மாறுபடும் கொள்கைகளால் இதில் பல குழப்பங்களும், சர்ச்சைகளும் ஏற்பட்டு உள்ளன. இது லாரி போக்குவரத்தை கடுமையாக பாதித்து இருக்கிறது. ஜி.எஸ்.டி. வரி பதிவுக்காக லாரி உரிமையாளர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள்.

    லாரியை வாங்கும் போது வரி, விற்கும் போதும் வரி என இருமுறை வரி செலுத்த வேண்டி இருக்கிறது. லாரிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மின்னணு ரசீது முறை லாரி போக்குவரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதால், அந்த முறையை ஒழிக்கவேண்டும். எனவே, ஜி.எஸ்.டி. வரி பதிவை கட்டாயம் ஆக்கக்கூடாது.

    டீசல் விலை உயர்வு லாரி போக்குவரத்தை வெகுவாக பாதிப்பதால், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும், நாடு முழுவதும் ஒரே விலை நிலவ, டீசலை ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் கீழ் கொண்டு வரவேண்டும். டீசலுக்கு தினசரி ஒரு விலை என்பதை தவிர்த்து காலாண்டுக்கு ஒரு விலை என்ற முறையை அமல்படுத்த வேண்டும்.

    அடுத்ததாக, சாலை போக்குவரத்தில் லஞ்சமும், அதிகாரிகளின் துன்புறுத்தலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எந்த புகாரும் இன்றி அதிகாரிகள் வாகன சோதனை நடத்துகிறார்கள். அதிக அளவில் லஞ்சம் கேட்கிறார்கள். இதை தடுக்கவேண்டும். வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வாகன சோதனை செய்யக்கூடாது. போலீசாரில் உதவி மற்றும் இணை கமிஷனர் நிலையிலான அதிகாரிகளே சோதனை செய்ய வேண்டும். லஞ்சத்தை தடுக்க சிறப்பு புலனாய்வுப்பிரிவு அமைக்க வேண்டும். அதில் மாநில அரசும் பங்கேற்க வேண்டும்.

    இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் 2 நாள் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வேலை நிறுத்தத்தை ஏ.ஐ.டி.டபுள்யு.ஏ., ஏ.சி.ஓ.ஜி.ஓ.ஏ. மற்றும் சிம்டா உள்ளிட்ட சங்கங்களும் இணைந்து நடத்துகின்றன. எனவே 9-ந் தேதி காலை 8 மணி முதல் 10-ந் தேதி இரவு 8 மணி வரை லாரிகள் ஓடாது.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 
    Next Story
    ×