search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் சிகிச்சை பெறும் கணவரை பார்க்க 15 நாள் ‘பரோல்’ கேட்டு சசிகலா புதிய மனு
    X

    சென்னையில் சிகிச்சை பெறும் கணவரை பார்க்க 15 நாள் ‘பரோல்’ கேட்டு சசிகலா புதிய மனு

    சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கணவரை பார்க்க வசதியாக 15 நாள் ‘பரோல்‘ கேட்டு சசிகலா புதிய மனு கொடுத்து உள்ளார்.
    பெங்களூரு:

    சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கணவரை பார்க்க வசதியாக 15 நாள் ‘பரோல்‘ கேட்டு சசிகலா புதிய மனு கொடுத்து உள்ளார். சசிகலா சார்பில் அவரது வக்கீல்கள், பெங்களூரு சிறை அதிகாரிகளிடம் அந்த மனுவை நேற்று வழங்கினர்.

    சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க.(அம்மா) அணி பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூரு தனி கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை கர்நாடக ஐகோர்ட்டு ரத்து செய்தது. மேல்முறையீட்டு வழக்கில் பெங்களூரு தனி கோர்ட்டு வழங்கிய தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது.

    இதையடுத்து சசிகலா உள்பட 3 பேரும் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். சசிகலாவுக்கு சிறை விதிமுறைகளை மீறி பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு இருப்பதாக சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா பரபரப்பு புகாரை கூறினார். இதுதொடர்பாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர்மட்ட குழு விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் சசிகலாவின் கணவர் நடராஜன், சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரகம், கல்லீரல் பாதிப்பு அடைந்து இருப்பதால் அவரது உடல்நிலை மோசமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். நேற்று அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட அந்த உடல் உறுப்புகளை அகற்றிவிட்டு, புதிய உறுப்புகளை டாக்டர்கள் பொருத்தினர்.

    இதற்கிடையே நேற்று முன்தினம் சசிகலா சார்பில் 15 நாட்கள் ‘பரோல்‘ வழங்கக் கோரி பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறை அதிகாரிகளிடம் மனு வழங்கப்பட்டது. மனுவை பரிசீலித்த அதிகாரிகள், மனுவில் இடம் பெற்றிருந்த விவரங்கள் முழுமையாக இல்லை என்று கூறி அதை தள்ளுபடி செய்தனர். அதோடு முழு விவரங்களுடன் புதிய மனுவை தாக்கல் செய்யும்படியும் சசிகலா தரப்பினருக்கு சிறைத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

    இந்த நிலையில் சசிகலா சார்பில் நேற்று மீண்டும் ‘பரோல்’ கேட்டு மனு கொடுக்கப்பட்டு உள்ளது. சசிகலா சார்பில் அவருடைய வக்கீல்கள் 4 பேர் அடங்கிய குழுவினர் நேற்று பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறைக்கு நேரில் சென்று, சிறை அதிகாரிகளிடம் ‘பரோல்‘ கேட்டு புதிய மனுவை தாக்கல் செய்தனர். அதில், மரண படுக்கையில் உள்ள தனது கணவர் நடராஜன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்க்க தனக்கு 15 நாட்கள் ‘பரோல்‘ வழங்குமாறு சசிகலா கோரியுள்ளார்.

    அந்த மனுவுடன் சிறை அதிகாரிகள் கேட்ட கூடுதல் மருத்துவ ஆவணங்களையும் வக்கீல்கள் இணைத்து உள்ளனர். முக்கியமாக மருத்துவமனையில் நடராஜன் உடல்நிலை மோசமாக உள்ளது என்பதற்கான அரசின் ‘கெசடட்‘ அதிகாரி வழங்கிய சான்றிதழ் அந்த மனுவுடன் இணைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    சென்னைக்கு சசிகலாவை அழைத்து செல்ல தடையில்லா சான்றிதழ் வழங்கக் கோரி சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்கு பெங்களூரு சிறை அதிகாரிகள் ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளனர். அங்கிருந்து தடையில்லா சான்றிதழ் வந்தவுடன் ‘பரோல்’ குறித்து சிறை அதிகாரிகள் முடிவு செய்வார்கள் என்று சொல்லப்படுகிறது.

    கர்நாடகத்தில் இன்று(வியாழக்கிழமை) வால்மீகி ஜெயந்தியை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால் நாளை(வெள்ளிக்கிழமை) சசிகலாவுக்கு ‘பரோல்‘ கிடைக்குமா? என்பது தெரியவரும். 
    Next Story
    ×