search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியானா சாமியார் குர்மீத் ராம் ரகீம் சிங்கின் வளர்ப்பு மகள் ஹனி பிரீத் கோர்ட்டில் சரண்?
    X

    அரியானா சாமியார் குர்மீத் ராம் ரகீம் சிங்கின் வளர்ப்பு மகள் ஹனி பிரீத் கோர்ட்டில் சரண்?

    கற்பழிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் அரியானா சாமியார் குர்மீத் ராம் ரகீம் சிங்கின் வளர்ப்பு மகள் ஹனி பிரீத் இன்று கோர்ட்டில் சரண் அடைவதாக தகவல் வெளியாகியுள்ளது.
    சண்டிகர்:

    தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரகீம் சிங் பாலியல் பலாத்கார வழக்கில் கடந்த மாதம் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அதை தொடர்ந்து அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் பெரும் கலவரம் ஏற்பட்டது.

    இந்த வன்முறையில் 38-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். வன்முறையின் போது குர்மீத்தின் ஆதரவாளர்கள் வாகனங்களுக்கு தீ வைத்ததோடு, பொதுச் சொத்துக்களையும் பெருமளவில் சேதப்படுத்தினர்.

    இந்த கலவரம் தொடர்பாக அரியானா மாநில போலீசார் 43 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். இவர்களில் குர்மீத் ராம் ரகீம் சிங்கின் வளர்ப்பு மகள் ஹனி பிரீத் இன்சான் முதலிடத்தில் இருக்கிறார். இவருக்கு அரியானா போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.

    போலீசாரால் தேடப்படுவதை அறிந்த ஹனி பிரீத் சிங் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். அவர் பீகார் மாநிலத்தின் எல்லையோரம் அமைந்துள்ள நேபாள நாட்டில் பதுங்கி இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் போலீசாரின் கைது நடவடிக்கையை தவிர்க்கும் வகையில் ஹனி பிரீத்துக்கு முன்ஜாமின் அளிக்க வேண்டும் என அவரது வழக்கறிஞர் பிரதீப் குமார் ஆர்யா டெல்லி ஐகோர்ட்டில் மனு செய்திருந்தார்.

    இந்த மனு டெல்லி ஐகோர்ட் விடுமுறைக்கால தலைமை நீதிபதியின் முன்னர் கடந்த மாதம் 26-ம் தேதி விசாரணைக்கு வந்தது. ஹனி பிரீத்துக்கு முன்ஜாமின் அளிக்கக்கூடாது என வாதாடிய அரியானா மாநில அரசுதரப்பு வக்கீல், பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதி மன்றத்தில் முன்ஜாமின் மனுவை தாக்கல் செய்யாமல் டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

    பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யாமல் டெல்லி ஐகோர்ட்டை அணுகியது ஏன்? என ஹனி பிரீத்தின் வக்கீலுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதி, இந்த மனு மீதான தீர்ப்பை ஒத்திவைப்பதாக தெரிவித்தார். பின்னர் அவரது ஜாமின் மனு தள்ளுபடியானது.


    ஆங்கில ஊடகத்துக்கு சமீபத்தில் பேட்டி அளித்த ஹனி பிரீத்

    இதற்கிடையில், ரகசிய இடத்தில் பதுங்கி இருக்கும் ஹனி பிரீத், பிரபல ஆங்கில ஊடகத்துக்கு சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். தனது தந்தை நிரபராதி என்று குறிப்பிட்ட அவர், ராம் ரகீம் சிங் கைதானபோது நடைபெற்ற கலவரங்களை கண்டு அதிர்சியடைந்ததாக தெரிவித்தார்.

    இந்நிலையில், அரியானா அல்லது டெல்லி ஐகோர்ட்டில் அவர் சரணடையப் போவதாக இன்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    இதையடுத்து, அவர் சரண் அடைவார் என்ற எதிர்பார்ப்பில் பத்திரிகையாளர்கள் கூட்டம் அரியானா மற்றும் டெல்லி ஐகோர்ட் அருகே முகாமிட்டுள்ளது.
    Next Story
    ×