search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஜராத் தேர்தல் பிரசாரம்: பிரதமர் மீது ராகுல் காந்தி கடும் தாக்கு
    X

    குஜராத் தேர்தல் பிரசாரம்: பிரதமர் மீது ராகுல் காந்தி கடும் தாக்கு

    சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, பிரதமர் மோடியின் பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கடுமையாக தாக்கி பேசினார்.
    அமகதாபாத்:

    சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, பிரதமர் மோடியின் பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கடுமையாக தாக்கி பேசினார்.   

    குஜராத் மாநில சட்டசபைக்கு இந்த ஆண்டின் இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பல ஆண்டுகளாக பாரதீய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பா.ஜ.க செல்வாக்கு பெற்று விளங்குகிறது. அங்கு தற்போது விஜய் ரூபானி முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.

    வரவுள்ள சட்டசபை தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஆயத்த வேலைகளை ஏற்கனவே தொடங்கி விட்டன.

    இந்நிலையில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

    துவாரகாவில் உள்ள துவாரகதீஷ் கோவிலுக்கு சென்று வழிபட்டு தனது பிரச்சாரத்தை ராகுல் காந்தி தொடங்கினார். ராகுலை வரவேற்ற கிராமத்தினர் பாரம்பரியமான மாட்டு வண்டியில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.

    அதன்பின்னர் ஜாம்நகர் மாவட்டத்தில் ஜாம்நகரில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

    குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சி வருவதற்கான சூழல் நிலவுகிறது. மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர். எனவே, காங்கிரஸ் நிச்சயம் ஆட்சி அமைக்கும். தங்களை தேர்வு செய்த மக்களை ஆட்சியாளர்கள் ஏமாற்றி வருகின்றனர். அதனால் குஜராத் மக்கள் மகிழ்ச்சியின்றி இருக்கின்றனர்.

    இந்த ஆட்சியில் அனைத்து துறைகளும் தனியார் மயமாகி வருகின்றன. அரசின் இந்த கொள்கையால் ஏழை எளிய மக்கள் கல்வி மற்றும் சுகாதார வசதிகளை பெற முடிவதில்லை.

    இந்த ஆட்சியில் வர்த்தக முதலாளிகளுக்கு ஏராளமான கடன் வழங்கப்படுகிறது. ஆனால் விவசாயிகளுக்கு ஏன் வழங்குவதில்லை. வர்த்தக முதலாளிகள் அனைத்து பலன்களையும் அடைந்து வருகின்றனர். ஆனால் பயிர்க்கடன் செலுத்தாத விவசாயிகளுக்கு சிறை தண்டனை தான் கிடைக்கிறது.

    விவசாயிகள் யாரும் தங்களது செல்போனிலோ அல்லது டெபிட் கார்டிலோ பண பரிமாற்றம் செய்வதில்லை. அவர்கள் பணம் கொடுத்து தான் விதைகளை வாங்குகின்றனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×