search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    20 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து குர்மீத் ராம் ரகீம் சிங் ஐகோர்ட்டில் மேல் முறையீடு
    X

    20 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து குர்மீத் ராம் ரகீம் சிங் ஐகோர்ட்டில் மேல் முறையீடு

    கற்பழிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட 20 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து அரியானா சாமியார் குர்மீத் ராம் ரகீம் சிங் இன்று மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
    சண்டிகர்:

    அரியானா மாநிலத்தை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரகீம்சிங். இவர் தன்னைத் தானே கடவுள் என்று அறிவித்துக் கொண்டு வட மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்ட ஆசிரமங்கள் அமைத்து செயல்பட்டு வந்தார்.

    இவருக்கு இந்தியாவிலும், பல்வேறு நாடுகளிலும் சுமார் 6 கோடி ஆதரவாளர்கள் உள்ளனர். அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா உள்பட பல நாடுகளில் இவருக்கு சுமார் 300 ஆசிரமங்கள் உள்ளன. பல ஆயிரம் கோடி சொத்துகளுக்கு இவர் அதிபதியாக உள்ளார்.

    இவர் மீது கடந்த 2002-ம் ஆண்டு பாலியல் பலாத்கார புகார் செய்யப்பட்டது. ஆசிரமத்தை சேர்ந்த இரு பெண்களை இவர் கற்பழித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கு ரோத்தக் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

    குர்மீத் ராம்ரகீம் சிங்கை குற்றவாளி என்றும் அவருக்கு தண்டனை விவரம் பின்னர் வெளியிடப்படும் என்றும் கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி ரோத்தக் சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், டெல்லி ஆகிய 5 மாநிலங்களில் கலவரம் வெடித்தது. இதில் 38 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் காயம் அடைந்தனர்.

    இதற்கிடையே, குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட குர்மீத் ராம் ரகீம் சிங்குக்கு ஒவ்வொரு வழக்கிலும் 10 ஆண்டு என இரு கற்பழிப்பு வழக்குகளில் 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஆகஸ்ட் 28-ம் தேதி நீதிபதி தீர்ப்பளித்தார்.

    இந்நிலையில், இந்த தண்டனைக்கு எதிராக பஞ்சாப் மற்றும் அரியானா மாநில ஐகோர்ட்டில் ராம் ரகீம் சிங்கின் வக்கீல் விஷால் கார்க் நார்வானா இன்று மேல் முறையீட்டி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

    இந்த வழக்கை நடத்திய சி.பி.ஐ. விசாரணையில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாகவும், குறிப்பாக, 1999-ம் ஆண்டு பாலியல் பலாத்காரம் நடைபெற்றதாக குற்றம்சாட்டிய இரு பெண்களிடம் இருந்து வாக்குமூலங்களை பதிவு செய்ய 2005-ம் ஆறாண்டுகள் வரை சி.பி.ஐ. அதிகாரிகள் தாமதம் செய்ததாகவும் இன்று தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×