search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங். அரசின் திட்டங்களை ஐ.நா.வில் அங்கீகரித்த சுஷ்மாவுக்கு நன்றி: ராகுல் காந்தி
    X

    காங். அரசின் திட்டங்களை ஐ.நா.வில் அங்கீகரித்த சுஷ்மாவுக்கு நன்றி: ராகுல் காந்தி

    ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம்.களை உருவாக்கியுள்ளோம் என ஐ.நா.சபையில் பேசிய சுஷ்மா ஸ்வராஜ்க்கு, காங்கிரஸ் அரசின் திட்டங்களை அங்கீகரித்ததற்கு நன்றி என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    நியூயார்க் நகரில் ஐ.நா பொதுச்சபையின் 72-வது மாநாடு நடைபெறுகிறது. இதற்காக அங்கு சென்றுள்ள இந்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் நேற்று கூட்டத்தில் பேசினார்.

    தனது பேச்சில் பாகிஸ்தானை மறைமுகமாக தாக்கிய அவர், “70 ஆண்டுகளில் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம்.களை கொண்டு வந்து அதன் மூலம் சிறந்த பொறியாளர்கள், டாக்டர்களை உருவாக்கியுள்ளோம். நீங்கள் தீவிரவாதிகளை உருவாக்கியுள்ளீர்கள்” என்று பேசினார்.

    மேலும், லஷ்கர் இ தாய்பா, ஹக்கானி போன்ற தீவிரவாத இயக்கங்களை தான் பாகிஸ்தான் உருவாக்கியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். சுஷ்மாவின் இந்த பேச்சுக்கு பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டுக்களை தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம்.களை உருவாக்கிய காங்கிரஸ் கட்சியின் கொள்கை மற்றும் பார்வையை அங்கீகாரம் செய்ததற்கு சுஷ்மா ஸ்வராஜ்க்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.

    70 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி நாட்டின் வளர்ச்சிக்கு எதுவும் செய்யவில்லை என பா.ஜ.க தலைவர்கள் கூறிவந்த நிலையில், காங்கிரஸ் அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லாமல் அவர்களால் இந்தியாவை பெருமைப்படுத்த முடியாது என காங்கிரஸ் கட்சியின் தொழில்நுட்ப துறை பிரிவு தலைவர் நேற்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×