search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை விவகாரம்: பாரிவேந்தர் மீதான மோசடி வழக்கை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
    X

    மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை விவகாரம்: பாரிவேந்தர் மீதான மோசடி வழக்கை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

    மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை விவகாரத்தில் பாரிவேந்தர் மீதான மோசடி வழக்கை ரத்து செய்யுமாறு சென்னை ஐகோர்ட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
    புதுடெல்லி:

    மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை விவகாரத்தில் பாரிவேந்தர் மீதான மோசடி வழக்கை ரத்து செய்யுமாறு சென்னை ஐகோர்ட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

    எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கி தருவதாக கூறி பல மாணவர்களின் பெற்றோரிடம் பல கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக வேந்தர் மூவிஸ் நிறுவனத்தின் அதிபர் மதன் கைது செய்யப்பட்டார். அவர் அந்த தொகையை பாரிவேந்தரிடம் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்ததால் எஸ்.ஆர்.எம். கல்வி குழுமத்தின் தலைவர் பாரிவேந்தரும் கைது செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் பாரிவேந்தருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய கோர்ட்டு, ரூ.85 கோடியை சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் உத்தரவாதமாக செலுத்த உத்தரவிட்டது. இந்த தொகையை அவர் சைதாப்பேட்டை கோர்ட்டில் செலுத்தினார்.

    இந்தநிலையில், தன் மீது தொடரப்பட்ட மோசடி வழக்கை ரத்து செய்யக்கோரி பாரிவேந்தர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, பாரிவேந்தர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது என்றும் அவர் மீதான வழக்கை விரைவாக விசாரித்து, 8 வாரத்துக்குள் குற்றப்பத்திரிகையை சம்பந்தப்பட்ட கோர்ட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்யவேண்டும் என்றும் கடந்த 6-ந் தேதி உத்தரவு பிறப்பித்தது.

    மேலும் இந்த வழக்கில் ஜாமீன் உத்தரவாதமாக கீழ் கோர்ட்டில் பாரிவேந்தர் செலுத்தியுள்ள தொகையை 20-ந்தேதிக்குள், பாதிக்கப்பட்ட 136 மாணவர்களின் பெற்றோருக்கு பிரித்து வழங்கவேண்டும் என்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    ஐகோர்ட்டின் இந்த உத்தரவை ரத்துசெய்யக்கோரி பாரிவேந்தர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. பாரிவேந்தர் தரப்பில் மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி ஆஜரானார்.

    வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-

    இந்த வழக்கில் புகார்தாரரான டாக்டர் கே.ஜெயச்சந்திரன் என்பவர் தாக்கல் செய்த கேவியட் மனுவில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி பாரிவேந்தர் தொகையை செலுத்தும் பட்சத்தில் இந்த வழக்கை ரத்து செய்வதில் தங்களுக்கு ஏதும் ஆட்சேபணை இல்லை என்று கூறப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் 136 பேர் தங்கள் தொகையை திரும்ப கோரியுள்ளனர். இவர்கள் அனைவரும் இதேபோன்ற நிபந்தனையில் வழக்கை ரத்துசெய்வதற்கு ஒப்புக்கொள்கிறார்கள் என்று கூறப்பட்டு உள்ளது.

    எனவே, புகார்தாரர்கள் அனைவரும் சென்னை ஐகோர்ட்டுக்கு இதனை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும். அந்த பிரமாண பத்திரங்கள் பெயரில் சென்னை ஐகோர்ட்டு பாரிவேந்தருக்கு எதிரான வழக்கை ரத்துசெய்து உத்தரவிட வேண்டும். இந்த பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யும் வரை எந்த தொகையும் யாருக்கும் திரும்ப வழங்கக்கூடாது. உரிய நபர்கள் மட்டுமே இந்த தொகையை திரும்ப பெறும் வண்ணம் ஐகோர்ட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    இந்த உத்தரவு பாரிவேந்தருக்கு மட்டுமே செல்லும். இந்த தொகையை திருப்பி அளிக்கும் போது மனுதாரர் பாரிவேந்தர் தரப்பும் உடன் இருக்கும். இந்த நிபந்தனையுடன் இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.

    இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது. 
    Next Story
    ×