search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ் கட்சி தலைவராக நவம்பரில் பொறுப்பேற்கிறார் ராகுல் காந்தி
    X

    காங்கிரஸ் கட்சி தலைவராக நவம்பரில் பொறுப்பேற்கிறார் ராகுல் காந்தி

    காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக வரும் நவம்பர் மாதம் ராகுல் காந்தி பொறுப்பேற்பார் என டெல்லி கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி : 

    காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக கடந்த 2013ம் ஆண்டு ராகுல் காந்தி பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்று 5 ஆண்டுகள் கடந்து விட்டன. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அவர் அமைச்சர் பொறுப்புபெற்க பல முறை அப்போது பிரதமராக இருந்து மன்மோகன்சிங் விருப்பம் தெரிவித்தார். ஆனால் சாதாரண தொண்டனாக இருந்து கட்சியை வலுப்படுத்தப்போவதாக ராகுல் அவற்றை மறுத்துவிட்டார். 

    இருப்பினும் மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னர் காங்கிரஸ் பல இடங்களில் தோல்வியை சந்தித்தது. இதனால் அவர் கட்சி தலைமை பொறுப்பு ஏற்பதை தள்ளி போட்டு வந்தார். இந்நிலையில் அண்மையில் அமெரிக்காவில் பேசிய ராகுல், வரவிருக்கும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக போட்டியிட தயார் என அறிவித்தார். இதை தொடர்ந்து வரும் நவம்பர் மாதத்தில் டெல்லியில் கட்சியின் தலைமைப் பொறுப்பை ராகுல் ஏற்க உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    காங்கிரஸ் கட்சியின் 132 வருட வரலாற்றில், 19 ஆண்டுகள் தலைவராக இருந்த முதல் தலைவர் சோனியா காந்தி. இதன்மூலம் நீண்ட காலம் தலைவராகப் பதவி வகித்தவர் என்ற பெருமையையும் அவர் பெறுகிறார். அன்னி பேசண்ட், சரோஜினி நாயுடு, இந்திரா காந்திக்கு பின்னர் இந்த பதவிவகித்த நான்காவது பெண்மணி என்ற பெருமையும் அவரையே சேரும். வயதின் காரணமாக கட்சியை பலப்படுத்த சோனியாவால் முன்பு போல் தீவிரமாக சுற்றுப்பயணம் செய்ய முடிவதில்லை. 

    இருப்பினும் ராகுல் தலைவரான பிறகும் அரசியலில் தொடர்ந்து இயங்குவார் என்று கூறப்படுகிறது. அத்துடன் காங்கிரஸ் பணிக் குழுவின் உறுப்பினராகவும், நாடாளுமன்றக் குழுவின் காங்கிரஸ் தலைவராகவும் சோனியா காந்தி நீடிப்பார் என தெரிகிறது. காங்கிரஸ் தலைவராக ராகுல் பொறுப்பேற்ற பிறகு 2019-ல் அவரின் புதிய குழு, கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் பங்கு வகிக்கும் என்றும் அதில் இளைஞர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


    Next Story
    ×