search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் 5 இடங்களில் பதுங்கல்: பிடிபட்ட தம்பி தகவல்
    X

    தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் 5 இடங்களில் பதுங்கல்: பிடிபட்ட தம்பி தகவல்

    மும்பை குண்டு வெடிப்பு தொடர்புடைய தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் 5 இடங்களில் பதுங்கி உள்ளதாக அவரது தம்பி போலீசில் கூறியுள்ளார்.

    தானே:

    மும்பையில் 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பில் நூற்றுக்கணக்கான அப்பாவிகள் பலியானார்கள்.

    இதில் சதித்திட்டம் தீட்டிய முக்கிய குற்றவாளியான மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் வெளி நாட்டுக்கு தப்பிச் சென்று தலைமறைவாக இருக்கிறான். அவனுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்து இருப்பதாக இந்தியா குற்றம்சாட்டி உள்ளது. பாகிஸ்தான் அதை மறுத்து வருகிறது.

    இந்த வழக்கில் தாவூத் இப்ராகிம் கூட்டாளிகளுக்கு மும்பை கோர்ட்டு தண்டனை வழங்கியது. தாவூத் இப்ராகிம் மட்டும் தொடர்ந்து தேடப்பட்டு வருகிறான்.

    இந்த நிலையில் மும்பை தானேயைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக தாவூத் இப்ராகிமின் தம்பி இக்பால் கஸ்கார் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் ஏற்கனவே இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

    மராட்டிய மாநிலத்தில் வசித்து வரும் இக்பால் துபாயில் இருந்தார். சில வழக்கு விசாரணைக்காக இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டார். இங்கு தானேயைச் சேர்ந்த தொழில் அதிபரிடம் பணம் கேட்டு மிரட்டிய புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார். அவருடன் 2 கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டனர்.

    அவர்கள் 3 பேரும் தானே கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களிடம் 8 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார்.

    இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இக்பாலிடம் போலீசார் தனியாக வைத்து தாவூத் இப்ராகிம் பதுங்கி இருக்கும் இடம் குறித்து தீவிர விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் தலைமறைவாக இருக்கும் இடங்கள் பற்றி திடுக்கிடும் தகவல்களை இக்பால் வெளியிட்டார்.

    தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானின் கராச்சி நகரில்தான் இருக்கிறார். அங்கு அவர் 5 விலாசங்களில் அடிக்கடி இடம் மாறி தலைமறைவாக இருக்கிறார் என்று தெரிவித்தார்.

    இக்பால் மேலும் கூறுகையில், மும்பை போலீஸ் தீவிரமாக தேடுவதால் கடந்த 3 ஆண்டுகளாக தாவூத் இப்ராகிம் இந்தியாவில் உள்ள உறவினர்கள், நண்பர்கள் யாருடனும் டெலிபோனில் பேசுவதை தவிர்த்து வருகிறார். டெலிபோனில் பேசினால் தான் இருக்கும் இடம் தெரிந்துவிடும் என்பதால் யாருடனும் பேசுவது கிடையாது. அதே சமயம் தாவூத் இப்ராகிம் தனது மற்றொரு சகோதரரான அணீஸ் அக மதுவுடன் மட்டும் தொடர்பில் இருப்பதாக தெரிவித்தார்.

    அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் தாவூத் இப்ராகிமை பாகிஸ்தானில் இருந்து கொண்டு வரும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

    தற்போது பிடிபட்டுள்ள 60 வயதாகும் இக்பால் மீது தானே தொழில் அதிபரிடம் ரூ.100 கோடி கேட்டு மிரட்டல் விடுத்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×