search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய அரசுடன் தாவூத் இப்ராகிம் பேரம் பேசுகிறார் - ராஜ்தாக்கரே குற்றச்சாட்டு
    X

    மத்திய அரசுடன் தாவூத் இப்ராகிம் பேரம் பேசுகிறார் - ராஜ்தாக்கரே குற்றச்சாட்டு

    இந்தியாவிற்கு திரும்பி வருவதற்காக மத்திய அரசுடன் தாவூத் இப்ராகிம் பேரம் பேசுகிறார் என ராஜ்தாக்கரே குற்றஞ்சாட்டியுள்ளார்.

    மும்பை:

    இந்தியாவில் நடைபெற்ற 1993 மும்பை குண்டு வெடிப்பு சம்பவங்கள் உள்பட பல்வேறு தீவிரவாத தாக்குதல்களில் தொடர்புடைய நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராகிம் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் பாகிஸ்தானில் தலைமறைவாக இருப்பதாக இந்தியா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இதுபற்றி பாகிஸ்தானிடம் தகவல் அளித்தும், அந்நாடு தாவூத் இப்ராகிமை இந்தியாவிடம் ஒப்படைக்கவில்லை. அத்துடன் தங்கள் நாட்டில் அவர் இல்லவே இல்லை என உறுதிபட மறுத்து வருகிறது. 

    பாகிஸ்தானில் தலைமறைவாக இருக்கும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு மத்திய அரசு தொடர்ந்து முயற்சிகள் எடுத்துவருகிறது. தாவூத் இப்ராகிமை இந்தியாவிற்கு கொண்டுவருவோம், நீதியின் முன் நிறுத்துவோம் என மத்திய அரசு கூறியது. அவரை இந்தியாவிடம் ஒப்படைக்கக்கோரி அனைத்து ஆவணங்களையும் பாகிஸ்தானிடம் அளிக்கப்பட்டு உள்ளது என மத்திய அரசு கூறிவருகிறது. சமீபத்தில் தாவூத் இப்ராகிமுக்கு சொந்தமான சுமார் ரூ.43 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை பிரிட்டன் அரசு முடக்கியது.
      
    இந்நிலையில் இந்தியா திரும்புவதற்காக மத்திய அரசுடன் தாவூத் இப்ராகிம் பேரம் பேசுகிறார் என ராஜ்தாக்கரே குற்றஞ்சாட்டியுள்ளார். 

    இதுகுறித்து மும்பையில் மராட்டிய நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே பேசுகையில், நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் தற்போது கை, கால்கள் செயல் இழந்த நிலையில் மாற்றுத்திறனாளியாக இருக்கிறார். அவர் இந்தியா திரும்புவதற்கு ஆர்வமாக இருக்கிறார். 

    இது தொடர்பாக மத்திய அரசிடம் பேரம் பேசி வருகிறார். பொது தேர்தலுக்கு கொஞ்ச நாட்களுக்கு முன்பு இந்த அரசு, தாவூத் இப்ராகிமை இந்தியா அழைத்து வந்து, அதற்கான புகழை தேடிக்கொள்ளும். நான் நகைச்சுவைக்காக இதை சொல்லவில்லை. இதுதான் உண்மை. இதனை பின் நாட்களில் நீங்கள் உணர்வீர்கள். தாவூத் இப்ராகிம் இந்தியா திரும்பியதும், நரேந்திர மோடி அரசு அதன் தாரை தப்பட்டையை வேகமாக அடிக்கும். அது பாரதீய ஜனதாவுக்கு அரசியல் ஆதாயமாக அமையும், என கூறினார். 
    Next Story
    ×