search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேரா சச்சா ஆசிரமத்தில் 600 மனித எலும்புக் கூடுகள்: பலரை கொன்று புதைத்ததாக புகார்
    X

    தேரா சச்சா ஆசிரமத்தில் 600 மனித எலும்புக் கூடுகள்: பலரை கொன்று புதைத்ததாக புகார்

    கற்பழிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் அரியானா சாமியார் ஆசிரமத்தில் 600 மனித எலும்பு கூடுகள் புதைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
    சிர்சா:

    சீக்கிய மதத்தின் ஒரு தனி பிரிவாக தேரா சச்சா சவுதா என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதற்கு உலகம் முழுவதும் 6 கோடி பக்தர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த அமைப்பின் தலைவராக ராம்ரகீம் சிங் செயல்பட்டு வந்தார். இதற்கு உலகம் முழுவதும் கிளைகள் உள்ளன. இதன் தலைமை ஆசிரமம் அரியானா மாநிலம் சிர்சாவில் செயல்பட்டு வந்தது.

    ராம்ரகீம் சிங் தலைமை ஆசிரமத்தில் 2 பெண்களை கற்பழித்ததாக புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. அதில் குற்றவாளியாக உறுதி செய்யப்பட்டதையடுத்து ராம்ரகீம் சிங்குக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    மேலும் அவர் மீது 2 பேரை கொலை செய்ததாக தனி வழக்கு உள்ளது. அந்த வழக்கு தனியாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில் ராம்ரகீம் சிங்கிடம் டிரைவராக இருந்த கட்டாசிங் இப்போது அவருக்கு எதிராக மாறி இருக்கிறார். ராம்ரகீம் சிங் மீதான குற்றங்கள் தொடர்பாக மாநில சிறப்பு புலனாய்வு பிரிவினர் தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அவர்களிடம் கட்டாசிங் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் ஆசிரம வளாகத்தில் பலரது உடல்கள் புதைக்கப்பட்டிருப்பதாக கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. சாமியாருக்கு எதிராக செயல்படுவோரை கொன்று புதைத்திருக்கலாம் என்றும் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

    இதையடுத்து சிறப்பு புலனாய்வு பிரிவினர் இதுசம்மந்தமாக தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த குழுவின் தலைவராக போலீஸ் அதிகாரி டி.எஸ்.பி. குல்தீப் பானிவால் செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையிலான போலீசார் சிர்சா தலைமை ஆசிரமம் முழுவதும் சோதனை நடத்தினார்கள்.

    இந்த ஆசிரமம் 800 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். அங்கு ஒரு இடத்தில் ஏராளமானோரை புதைத்துள்ளனர். அதுபற்றி ஆசிரமத்தின் மூத்த துணைத்தலைவர் பி.ஆர். நாயனிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது சுமார் 600 பேரின் உடல்கள் இங்கு புதைக்கப்பட்டிருப்பதாக அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.

    இந்த ஆசிரமத்தில் உடல்களை புதைத்தால் அவர்கள் மோட்சத்திற்கு செல்வார்கள் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் இருப்பதாகவும், எனவே இறந்தவர்களின் உறவினர்களே உடல்களை இங்கு புதைக்க சொன்னதாகவும் அவர் கூறினார். இவர்கள் அனைவருமே இயற்கையாக மரணம் அடைந்தவர்கள் என்றும் அவர் போலீசில் தெரிவித்தார்.

    600 பேர் உடல் புதைக்கப்பட்ட இடத்தில், தனித்தனியாக மரக்கன்றுகளை நட்டுள்ளனர். ஜெர்மனி விஞ்ஞானி ஒருவர் கொடுத்த ஆலோசனைப்படி உடல் புதைக்கப்பட்ட இடத்தில் மரத்தை நட்டிருப்பதாக நாயன் கூறியிருக்கிறார்.

    மேலும் புதைக்கப்பட்ட 600 பேர் யார், யார் என்ற பட்டியலையும் அவர் போலீசாரிடம் வழங்கியுள்ளார். எனவே இந்த 600 பேரும் அங்கு புதைக்கப்பட்டுள்ள உண்மையான நபர்கள்தானா? என விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள். அவர்களின் உறவினர்களை கண்டுபிடித்து விசாரணை நடத்தப்பட இருக்கிறது. இதன்பிறகு உடல்களை தோண்டி எடுத்து விசாரணை நடத்துவதற்கும் வாய்ப்பு உள்ளது.

    அப்போது யாராவது கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளார்களா? என்ற விவரங்கள் தெரியவரும்.
    Next Story
    ×