search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒரு மாத மழை ஒரே நாளில் கொட்டியது: மும்பையில் விமான சேவை தொடங்கியது
    X

    ஒரு மாத மழை ஒரே நாளில் கொட்டியது: மும்பையில் விமான சேவை தொடங்கியது

    மும்பையில் ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்ததால் பாதிக்கப்பட்ட விமான போக்குவரத்து சேவை இன்று மீண்டும் தொடங்கியது.
    மும்பை:

    மும்பையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 29-ந்தேதி பலத்த மழை கொட்டியது. ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டியது.

    இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி 2-வது தடவையாக மீண்டும் பலத்த மழை கொட்டியது. இந்த முறையும் ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்தது. செப்டம்பர் மாதத்தில் சராசரியாக 312 மி.மீ. மழை பெய்யும். ஆனால் 19-ந்தேதி ஒரே நாளில் மட்டும் 304 மி.மீ. மழை பெய்தது. இதனால் மும்பை வெள்ளத்தில் தத்தளித்தது.

    விமான போக்குவரத்தும் ரெயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. மும்பை விமான நிலையத்தில் பிரதான ஓடு பாதையில் தரை இறங்கிய ஜெட் விமானம் சகதியில் சிக்கியதால் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று வரை அனைத்து விமானங்களும் தரை இறங்க முடியாமல் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டது. இதனால் மும்பை செல்ல வேண்டிய பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர். இன்று காலை வரை இந்த நிலை நீடித்தது.

    இந்த நிலையில் மழை குறைந்ததால் ஓடுபாதையில் தேங்கிய தண்ணீர் வெளியேற்றப்பட்டு சகதியில் சிக்கிய விமானம்  ஓடுபாதையில் இருந்து வெளியேற்றப்பட்டது. இதையடுத்து இன்று பிற்பகல் விமான போக்குவரத்து மீண்டும் சீரானது. பிரதான ஓடுபாதையில் வழக்கம்போல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.

    நாட்டில் டெல்லிக்கு அடுத்தபடியாக மும்பை சத்ரபதி விமான நிலையம் 2-வது பெரிய விமான நிலையம் ஆகும்.

    இதற்கிடையே மும்பை நகரில் அவ்வப்போது மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. ஒருசில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாகவும், நாளை வரை இந்த நிலை நீடிக்கும் எனவும்  கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×