search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொருளாதார வளர்ச்சியை முடுக்கிவிட அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்: நிதி மந்திரி அருண் ஜெட்லி அறிவிப்பு
    X

    பொருளாதார வளர்ச்சியை முடுக்கிவிட அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்: நிதி மந்திரி அருண் ஜெட்லி அறிவிப்பு

    பிரதமர் மோடியுடன் விவாதித்து பொருளாதார வளர்ச்சியை முடுக்கி விட, அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நிதி மந்திரி அருண் ஜெட்லி அறிவித்தார்.
    புதுடெல்லி:

    பிரதமர் மோடியுடன் விவாதித்து பொருளாதார வளர்ச்சியை முடுக்கி விட, அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நிதி மந்திரி அருண் ஜெட்லி அறிவித்தார்.

    நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம், ஜூன் 30-ந் தேதியுடன் முடிந்த காலாண்டில் 5.7 சதவீதம் ஆக சரிந்துள்ளது. இது 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக்குறைந்த வளர்ச்சி வீதம் ஆகும்.

    இந்த நிலையில் டெல்லியில் நேற்று நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்துக்கு பின்னர் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பண வீக்கத்தைப் பொறுத்தமட்டில் 4 சதவீதம் என்ற பணக்கொள்கை இலக்குக்குள்தான் இருக்கிறது.

    பருவமழைக் காலத்தில் காய்கறி விலைகள் சாதாரணமாக உயரும். இது உயரும் காலம். இந்த காலகட்டத்தில் 3.6 சதவீதம் என்பது பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதையே காட்டுகிறது.

    ஆகஸ்டு மாதம் சில்லரை பணவீக்க விகிதம் 5 மாதங்களில் இல்லாத உயர்ந்தபட்ச அளவாக 3.36 சதவீதமாக இருந்தது. கைவசமுள்ள அனைத்து பொருளாதார குறியீடுகளையும் கவனத்தில் கொண்டுள்ளோம். தேவைப்படுகிற எந்தவொரு கூடுதலான நடவடிக்கையையும் அரசு எடுக்கும்.

    பொருளாதார வளர்ச்சியை முடுக்கி விட ஏதுவாக கூடுதல் (அதிரடி) நடவடிக்கைகள் எடுப்பது பற்றி செயலாற்றி வருகிறோம். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்து ஆலோசனை செய்து விட்டு அறிவிப்பு வெளியிடப்படும்.

    இது செயல்படும் ஒரு அரசாங்கம். தேவைக்கேற்ப பதில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நாங்கள் சரியான நடவடிக்கை எடுத்து வந்துள்ளோம். சீர்திருத்த செயல்பாடுகளை நோக்கி நகர்ந்து வருகிறோம்.

    தற்போதைய பொருளாதாரச்சூழல் நிலவரம் குறித்தும், பொருளாதார வளர்ச்சியை முடுக்கி விடவும் என்ன செய்யலாம் என்பது பற்றியும், கடந்த சில நாட்களாக கூட்டங்கள் நடத்தி எனது அமைச்சரக அதிகாரிகளுடனும், அரசு செயலாளர்களுடனும், நிபுணர்களுடனும் விவாதித்து வருகிறேன்.

    பெட்ரோல், டீசல் விலையைப் பொறுத்தமட்டில், விரைவில் குறையும். அரசாங்கம் செயல்படுவதற்கு நிதி தேவை என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். நீங்கள் எதை வைத்துக்கொண்டு நெடுஞ்சாலைகளை அமைப்பீர்கள்?

    அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவதற்கு அரசாங்கம் செலவு செய்வதை அதிகரித்துள்ளது. பொது செலவினம் குறைந்தால், அது சமூக நல திட்டங்களை குறைப்பதாகத்தான் அர்த்தம்.

    நீங்கள் பல விஷயங்களை கவனிக்க வேண்டும். அமெரிக்காவில் புயல் வீசியதால், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு திறன் பெரிய அளவில் பாதிப்புக்குள்ளானது. இதனால் தேவையை சமாளிக்கிற அளவுக்கு வினியோகம் இல்லை. தற்காலிக விலையேற்றம் ஏற்பட்டது.

    பெட்ரோலிய பொருட்கள் மூலம் மத்திய அரசு பெறுகிற வரி வருவாயில் 42 சதவீதம் மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசாங்கங்கள், இதை வேண்டாம் என்று சொல்லட்டும். 
    Next Story
    ×