search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் மேலும் 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை
    X

    கேரளாவில் மேலும் 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

    கேரளாவில் மேலும் நான்கு தினங்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த சில தினங்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மலையோர மாவட்டங்களான கோட்டயம், இடுக்கி, பத்தனம் திட்டை, வயநாடு மற்றும் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. மழைக்கு கேரளாவில் இதுவரை 6 பேர் பலியாகி உள்ளனர்.

    கோட்டயத்தில் ரெயில்வே பாலம் பகுதியில் மண் சரிந்து விழுந்து போக்குவரத்து பலமணி நேரம் பாதிக்கப்பட்டது. இதனால் குருவாயூர்- சென்னை, பெங்களூர் -கன்னியாகுமரி உட்பட பல எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

    கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், ஆலப்புழை, இடுக்கி ஆகிய மாவட்டங்களில் பல வீடுகள் இடிந்து விழுந்து சேதம் அடைந்தது. சாலையோரங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்தும் பல இடங்களில் முடங்கியது.

    கேரளாவில் பெய்து வரும் மழை காரணமாக அனைத்து அணைகளிலும் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கேரளாவில் மேலும் 4 தினங்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

    நேற்று கோட்டயம், இடுக்கி, வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏற்படவில்லை.

    அடிமாலி- குமுளி பாதையில் கல்லார்குட்டி அணையில், சாலையோர கடைகள் இடிந்து விழுந்து தண்ணீரில் மூழ்கியது. அந்த கடைகளில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் அங்கிருந்து ஓடியதால் உயிர் பிழைத்தனர்.

    மேலும் மலை பாதையில் உள்ள சாலைகளில் கரையோர பகுதியில் நீண்ட தூரத்திற்கு வெடிப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால் எப்போது வேண்டுமானாலும் இந்த சாலைகள் அணைப்பகுதிக்குள் இடிந்து விழும் அபாய நிலையும் எற்பட்டு உள்ளது.
    Next Story
    ×