search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புஸ்வாணம் ஆகும் சிவ சேனாவின் மிரட்டல்: பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலக 25 எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு
    X

    புஸ்வாணம் ஆகும் சிவ சேனாவின் மிரட்டல்: பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலக 25 எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு

    மகாராஷ்டிராவில் ஆளும் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து சிவ சேனா கட்சி விலகும் யோசனைக்கு 25 எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், சிவ சேனாவின் மிரட்டல் முயற்சி புஸ்வாணம் ஆகிவிடும் என்று கூறப்படுகிறது.
    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜ.க, ஆட்சியமைக்க பெரும்பான்மை பலம் இல்லாத காரணத்தால் சிவ சேனாவுடன் கூட்டணி வைத்து ஆட்சியமைத்தது. இரு கட்சியின் தலைமைக்கும் பெரிய நெருக்கம் இல்லாமலேயே ஆட்சி நகர்ந்து வந்தது.

    கூட்டணியில் இருந்தாலும் பா.ஜ.க. மீது தொடர்ந்து விமர்சித்து வந்த சிவ சேனா, தற்போது கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவுக்கு வந்திருப்பதாக அக்கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்தார். முடிவு எடுக்கும் முன்னதாக உத்தவ் தாக்கரே, முதல்வர் பட்னாவிஸ்-க்கு இறுதியாக ஒரு எச்சரிக்கை கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

    எனவே, சிவ சேனா மத்தியிலும் மாநிலத்திலும் விரைவில் கூட்டணியில் இருந்து விலகலாம் என்றும், இதன் காரணமாக பா.ஜ.க. அரசுக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.

    ஆனால், நேற்று சிவ சேனா கட்சியின் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் இதுதொடர்பாக விவாதிக்கப்பட்டபோது, கூட்டணியில் இருந்து விலகும் முடிவிற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. குறிப்பாக மேற்கு மகாராஷ்டிராவைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு தங்களிடம் பணபலம் இல்லை என்றும் பா.ஜ.க.வின் பணபலத்துடன் ஒப்பிட முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.

    மொத்தம் உள்ள 63 எம்.எல்.ஏ.க்களில் சுமார் 25 எம்.எல்.ஏ.க்கள், கூட்டணியில் இருந்த விலகும் யோசனைக்கு ஆட்சேபம் தெரிவித்ததால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. வார்த்தை மோதல்களும் ஏற்பட்டுள்ளது. எனவே, சிவ சேனாவின் இந்த மிரட்டல் முயற்சி புஸ்வாணம் ஆகிவிடும் என்றே தெரிகிறது.

    இதுபற்றி பா.ஜ.க. செய்தித் தொடர்பாளரிடம் கேட்டபோது, தங்களுக்கு எந்த இறுதி எச்சரிக்கையும் வரவில்லை என்றும், வந்தால் அதற்கு பதில் அளிப்பதாகவும் கூறினார். மேலும், தேவேந்திர பட்னாவிஸ் அரசு தனது முழு பதவிக் காலத்தையும் நிறைவு செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×