search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசாணை பிறப்பித்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது ஏன்?: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
    X

    அரசாணை பிறப்பித்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது ஏன்?: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்

    அரசாணை பிறப்பிக்கப்பட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது ஏன்? என மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    காவிரி நதி நீர்ப்பங்கீடு தொடர்பாக காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பபை எதிர்த்து தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்துள்ளன. இந்த மனுக்கள் மீதான இறுதிக்கட்ட விசாரணை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் நடைபெற்று வருகிறது. இதில், மாநிலங்கள் தரப்பு வாதம் நிறைவடைந்த நிலையில், மத்திய அரசு இன்று தனது வாதத்தை முன்வைத்தது. அப்போது மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் கூறியதாவது:-

    காவிரி போன்ற இரு மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சனைகளில் நாடாளுமன்றமே முடிவெடுக்க முடியும். தீர்ப்பாயத்தின் உத்தரவுகளை முடிவு செய்யும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே உள்ளது, நீதிமன்றம் தலையிட முடியாது. இரு மாநில நதி நீர் பிரச்சனைகளில் நாடாளுமன்றமே முடிவெடுக்க முடியும்.

    காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு நாடாளுமன்றத்தின் முடிவிற்கு கட்டுப்பட்டது. தீர்ப்பாயம் தீர்ப்பு அளித்திருத்தும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க தயார். காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை முழுமையாக செயல்படுத்த தயாராக இருக்கின்றோம்.

    இவ்வாறு மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது.

    காவிரி விவகாரத்தில் சுமூக தீர்வு ஏற்பட மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மத்திய அரசை தமிழக அரசு குற்றம் சாட்டியது.

    காவிரி நதி நீர் பங்கீடு வழக்கில் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்து உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கால தாமதம் செய்வது மத்திய அரசின் தவறான அணுகுமுறையாகும். 2013 ஆம் ஆண்டு அரசாணை பிறப்பித்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தாமதம் ஏன்? என சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியது. காவிரி நதி நீர் பங்கீடு வழக்கில் மத்திய அரசின் செயல்பாடு குறித்தும் சுப்ரீம் கோர்ட் அதிருப்தி தெரிவித்து உள்ளது.
    Next Story
    ×