search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீட் தேர்வு போராட்டங்களுக்கு தடை கோரும் வழக்கு: பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய கோர்ட்டு உத்தரவு
    X

    நீட் தேர்வு போராட்டங்களுக்கு தடை கோரும் வழக்கு: பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய கோர்ட்டு உத்தரவு

    நீட் தேர்வுக்கு எதிராக நடை பெறும் பேராட்டங்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 2 வாரங்களுக்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
    புதுடெல்லி:

    நீட் தேர்வுக்கு எதிராக நடை பெறும் பேராட்டங்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 2 வாரங்களுக்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

    தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் தொடர்பாக வக்கீல் ஜி.எஸ்.மணி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்து உள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டது குறித்து ஓய்வுபெற்ற சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஒருவரின் தலைமையில் நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்றும், சட்ட விரோதமான போராட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார்.

    இந்த மனு கடந்த 8-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரை கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, கடந்த 8-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, சட்டம்- ஒழுங்கை பாதிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும், இந்த வழக்கில் 18-ந் தேதி (நேற்று) தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் நேரடியாக ஆஜராகி கோர்ட்டுக்கு உதவ வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்து இருந்தனர்.



    அதன்படி நேற்று இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏஎம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, கோர்ட்டு உத்தரவின் படி தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன் ஆஜர் ஆனார்.

    விசாரணை தொடங்கியதும் மனுதாரர் வக்கீல் ஜி.எஸ்.மணி தன்னுடைய வாதத்தில், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து இருந்தும் எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டம் என்ற பெயரில் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அனுமதிக்கப்படாத இடங்களில் போராட்டம் நடத்தி வருவதாகவும், இதை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டது என்றும், எனவே கோர்ட்டு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூறினார்.

    உடனே நீதிபதிகள், தமிழக அரசு அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணனிடம், “கோர்ட்டு தடை விதித்து இருந்தும் ஏன் இவ்வாறான போராட்டங்கள் தொடர்கின்றன?“ என்று கேள்வி எழுப்பினார்கள்.

    அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

    சுப்ரீம் கோர்ட்டு போராட்டங்களுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்த பிறகு தலைமைச் செயலாளர் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அமல்படுத்த கோரி அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் காவல் துறை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. அது மட்டுமின்றி இதுவரை தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு மாவட்ட கலெக்டர்களிடம் இருந்தோ காவல் துறையிடமிருந்தோ அசம்பாவிதங்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டதாக தகவல் ஏதும் இல்லை.

    அசம்பாவிதம் நடக்காமல் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை வராமல் இருக்கிற இடங்களை தேர்வு செய்து, பொதுக்கூட்டம் நடத்துவதற்கு மட்டும்தான் காவல் துறை அனுமதி அளித்து உள்ளது. அமைதியான முறையில் பொதுக்கூட்டம் நடத்துவது தொடர்பான விளக்கத்தை சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே வழங்கி உள்ளது. அதன் அடிப்படையிலேயே அனைத்தும் நடைபெறுகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து நீதிபதிகள், தமிழ்நாட்டில் போராட்டங்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு நிலைமை தொடர்பான விளக்கத்தை பிரமாண பத்திரம் மூலம் தலைமைச் செயலாளர் 2 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர். பின்னர் வழக்கு விசாரணையை வருகிற அக்டோபர் 9-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
    Next Story
    ×