search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோஹிங்கியா அகதிகள் விவகாரத்தில் இனி சுப்ரீம் கோர்ட் முடிவு செய்யும்: ராஜ்நாத் சிங்
    X

    ரோஹிங்கியா அகதிகள் விவகாரத்தில் இனி சுப்ரீம் கோர்ட் முடிவு செய்யும்: ராஜ்நாத் சிங்

    ரோஹிங்கியா அகதிகளை இந்தியாவில் இருந்து வெளியேற்றும் விவகாரத்தில் இனி சுப்ரீம் கோர்ட் முடிவு செய்ய வேண்டும் என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    மியான்மர் நாட்டில் ராணுவ ஒடுக்குமுறைக்கு பயந்து சுமார் 4 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அண்டை நாடான வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இதேபோல், இந்தியாவில் சுமார் 14 ஆயிரம் ரோஹிங்கியா அகதிகள் தங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளது.

    எனினும், அனுமதியின்றி இந்தியாவுக்குள் நுழைந்து ஜம்மு, ஐதராபாத், அரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் அகதிகளாக தங்கியுள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களின் எண்ணிக்கை சுமார் 40 ஆயிரம் என கூறப்படுகிறது.

    இந்நிலையில், இவர்களில் ஒரு பிரிவினருக்கும் இந்தியாவில் தடை செய்யப்பட்ட அல்-கொய்தா, அல்-உம்மா, ஐ.எஸ்.ஐ.எஸ். உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்களை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருப்பதால் இவர்களை மியான்மர் நாட்டுக்கு திருப்பி அனுப்ப மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

    உரிய அனுமதியின்றி தங்கள் மாநிலத்தில் தங்கியுள்ளவர்கள் அனைவரையும் உடனடியாக வெளியேற்ற தனிக்குழுவை அமைத்து நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜூலை மாதம் அறிவுறுத்தி இருந்தது.

    மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து ஐக்கிய நாடுகள் அகதிகள் முகமையில் பதிவுசெய்து இந்தியாவில் தங்கியுள்ள ரோஹிங்கியா அகதிகளான முஹம்மது சலிமுல்லா, முஹம்மது ஷாகிர் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். சர்வதேச அகதிகள் பாதுகாப்பு சட்டம் மற்றும் மனித உரிமை சட்டங்களை மீறிய வகையில், அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள தங்களை மீண்டும் மியான்மருக்கு திருப்பி அனுப்ப கூடாது என அவர்கள் தெரிவித்திருந்தனர்.

    சுப்ரீம் கோர்ட் அனுப்பிய நோட்டீசை பெற்றுகொண்ட மத்திய அரசு, இந்த வழக்கில் இன்று தனது கருத்தை தெரிவித்தது. இதுதொடர்பாக, மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் (அபிடவிட்), ‘இந்தியாவின் எந்த பகுதியிலும் விருப்பம்போல் தங்கி வாழ, இந்நாட்டில் பிறந்தவர்களுக்கு மட்டும்தான் உரிமை உள்ளது. உரிய அனுமதி இல்லாமல் அகதிகளாக வந்தவர்கள் இதற்கான உரிமையை கோர முடியாது.

    மேலும், உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் அனுமதியின்றி இங்கு தங்கியுள்ள ரோஹிங்கியா அகதிகளை வெளியேற்ற அரசு தீர்மானித்துள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
     
    இந்நிலையில், டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிடம், ரோஹிங்கியா அகதிகளை இந்தியாவில் இருந்து வெளியேற்றும் மத்திய அரசின் முடிவு தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    இதற்கு பதிலளித்த அவர், தற்போது இதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. மத்திய அரசின் நிலைப்பாடு இன்று பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இனி, இவ்விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் தான் தீர்மானிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டார்.
    Next Story
    ×