search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐகோர்ட்டு உள்பட 8 ஐகோர்ட்டுகளுக்கு புதிய நீதிபதிகள் நியமனம் பற்றி சுப்ரீம் கோர்ட்டு குழு பரிசீலனை
    X

    சென்னை ஐகோர்ட்டு உள்பட 8 ஐகோர்ட்டுகளுக்கு புதிய நீதிபதிகள் நியமனம் பற்றி சுப்ரீம் கோர்ட்டு குழு பரிசீலனை

    சென்னை ஐகோர்ட்டு உள்பட 8 ஐகோர்ட்டுகளுக்கு புதிய நீதிபதிகளை நியமனம் செய்வது பற்றி சுப்ரீம் கோர்ட்டு குழு பரிசீலனை செய்கிறது.
    புதுடெல்லி:

    சென்னை ஐகோர்ட்டு உள்பட 8 ஐகோர்ட்டுகளுக்கு புதிய நீதிபதிகளை நியமனம் செய்வது பற்றி சுப்ரீம் கோர்ட்டு குழு பரிசீலனை செய்கிறது.

    சென்னை ஐகோர்ட்டு உள்ளிட்ட பல்வேறு ஐகோர்ட்டுகளில் நீதிபதிகள் பணி இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.

    13 ஐகோர்ட்டுகளில் புதிய நீதிபதிகளை நியமிக்கவும், கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கவும் சுப்ரீம் கோர்ட்டு கொலிஜியத்துக்கு (மூத்த நீதிபதிகளைக்கொண்ட தேர்வுக்குழு) பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 61 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

    இவற்றில் சென்னை, ஜார்கண்ட், கர்நாடகம், குஜராத், மும்பை உள்ளிட்ட 8 ஐகோர்ட்டுகளுக்கு புதிய நீதிபதிகளை நியமனம் செய்வதற்கு 36 பேரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

    மேலும், 5 ஐகோர்ட்டுகளில் கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்வதற்கு 25 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

    இது தவிர்த்து ஆந்திரா-தெலுங்கானா, கொல்கத்தா, டெல்லி, இமாசலபிரதேசம், ஜார்கண்ட், மணிப்பூர் ஆகிய 6 ஐகோர்ட்டுகளில் தலைமை நீதிபதி பதவிக்கும் நியமனங்கள் செய்ய பரிந்துரைக்கப்பட்டு நிலுவையில் உள்ளன.

    இந்த பரிந்துரைகள் அனைத்தும் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்து, கடந்த மாதம் 27-ந் தேதி பணி நிறைவு செய்த ஜே.எஸ். கேஹர் பதவிக்காலத்தில் செய்யப்பட்டவை ஆகும்.

    கடந்த மாதம் 28-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா பதவி ஏற்ற பிறகு, எந்தவொரு ஐகோர்ட்டுக்கும் நீதிபதி நியமனம் தொடர்பாக பரிந்துரை எதுவும் செய்யப்படவில்லை.

    ஏற்கனவே செய்யப்பட்ட பரிந்துரைகள் இப்போது சுப்ரீம் கோர்ட்டு கொலிஜியத்தின் பரிசீலனையில் உள்ளன.

    மத்திய சட்ட அமைச்சகத்தின் புள்ளி விவரப்படி கடந்த 1-ந் தேதி நிலவரப்படி 24 ஐகோர்ட்டுகளின் அனுமதிக்கப்பட்ட நீதிபதி பணி இடங்களின் எண்ணிக்கை 1,079. அவற்றில் 413 பணி இடங்கள் காலியாக உள்ளன. 
    Next Story
    ×