search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘சரக்கு, சேவை வரியின் கீழ் பெட்ரோல், டீசலை கொண்டு வரவேண்டும்’: பெட்ரோலிய மந்திரி கோரிக்கை
    X

    ‘சரக்கு, சேவை வரியின் கீழ் பெட்ரோல், டீசலை கொண்டு வரவேண்டும்’: பெட்ரோலிய மந்திரி கோரிக்கை

    சரக்கு, சேவை வரியின் கீழ் பெட்ரோல், டீசலை கொண்டு வர வேண்டும் என மத்திய நிதி அமைச்சகத்திடம் பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் கோரிக்கை விடுத்துள்ளார்.
    ஐதராபாத்:

    சரக்கு, சேவை வரியின் கீழ் பெட்ரோல், டீசலை கொண்டு வர வேண்டும் என மத்திய நிதி அமைச்சகத்திடம் பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் கோரிக்கை விடுத்துள்ளார்.

    நாடு முழுவதும் கடந்த ஜூலை மாதம் 1-ந் தேதி முதல் ‘ஒரே தேசம், ஒரே வரி’ என்ற கோஷத்துடன் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி விதிப்பு முறையை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது.

    ஆனால் இந்த வரி விதிப்பு முறையின் கீழ் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்கள் கொண்டு வரப்படவில்லை. அவற்றுக்கு விலக்கு வழங்கப்பட்டுள்ளது. பெட்ரோலிய பொருட்களுக்கு மத்திய அரசு தன் பங்குக்கு உற்பத்தி வரியையும், மாநில அரசுகள் மதிப்பு கூட்டு வரியையும் விதிக்கின்றன.

    இந்த நிலையில் பெட்ரோலிய துறை மந்திரி தர்மேந்திர பிரதான், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பொதுமக்களின் நலனை முன்னிட்டு, பெட்ரோலிய பொருட்களையும் சரக்கு, சேவை வரியின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

    இது பெட்ரோலிய அமைச்சகத்தின் முன்மொழிவு ஆகும். இதை மத்திய நிதி அமைச்சகத்திடமும், அனைத்து மாநிலங்களிடமும் வைத்துள்ளோம். பொதுமக்கள் நலனுக்காக சீரான வரி முறை இருக்க வேண்டும். ஜி.எஸ்.டி., மத்திய அரசின், மாநில அரசுகளின் நற்சிந்தனையில் பிறந்த வரி விதிப்பு முறை ஆகும்.

    பெட்ரோலிய பொருட்களை பொறுத்தமட்டில் மத்திய அரசு உற்பத்தி வரியையும், மாநில அரசுகள் மதிப்பு கூட்டு வரியையும் (வாட் வரி) விதிக் கின்றன. எனவே தான் நாங்கள் ஒரே விதிப்பு முறைதான் (ஜி.எஸ்.டி.) இருக்க வேண்டும் என்று கூறுகிறோம்.

    பெட்ரோலிய பொருட்களுக்கு தினமும் விலை நிர்ணயம் செய்யும் முறை சரியானதுதான். மத்திய அரசு விதிக்கிற வரியில் 42 சதவீதம், மாநில அரசுகளுக்கு கிடைக்கிறது.

    சர்வதேச அளவிலான விலையின் அடிப்படையில்தான் உள்நாட்டில் பெட்ரோலிய பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்படுகின்றது. சர்வதேச சந்தையில் விலை உயர்கிறபோது, இங்கும் உயர்கிறது. அங்கே விலை குறைகிறபோது இங்கும் குறைகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×