search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சசிகலா அடைக்கப்பட்டிருக்கும் பெங்களூர் சிறையில் போலீசார் அதிரடி சோதனை
    X

    சசிகலா அடைக்கப்பட்டிருக்கும் பெங்களூர் சிறையில் போலீசார் அதிரடி சோதனை

    சசிகலா அடைக்கப்பட்டிருக்கும் பெங்களூர் சிறையில் கர்நாடக போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சிறைத்துறை வட்டாரத்தில் இந்த திடீர் சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பெங்களூர்:

    பெங்களூர்-ஓசூர் சாலையில் உள்ள பரப்பன அக்ரஹாரம் எனுமிடத்தில் பெங்களூர் மத்திய சிறைச்சாலை உள்ளது.

    40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சிறையில் 2200 கைதிகள் தங்க வைக்க வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அங்கு 2 மடங்கு அதிக கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த ஆண்டு தொடக்கத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்புப் படி பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் 4 ஆயிரத்து 400-க்கும் மேற்பட்ட கைதிகள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த சிறையில் ஆண் கைதிகளுக்கும், பெண் கைதிகளுக்கும் தனித்தனி வளாகம் உருவாக்கப்பட்டுள்ளது.

    சாதாரண கைதிகள் முதல் வி.வி.ஐ.பி. அந்தஸ்து கொண்ட தலைவர்களை இந்த சிறைச்சாலை பார்த்துள்ளது. ஊழல் வழக்கில் சிக்கிய கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா இந்த சிறையில்தான் அடைக்கப்பட்டார்.

    தற்போது சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்று இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு பல்வேறு சலுகைகள் காட்டப்படுவதாக போலீஸ் உயர் அதிகாரி ரூபா குற்றம் சாட்டினார். இதற்கான வீடியோ ஆதாரங்களையும் அவர் வெளியிட்டார்.

    இதையடுத்து பெங்களூர் பரப்பன அக்ரஹார ஜெயிலில் நடக்கும் முறைகேடுகள் பற்றி விசாரிக்க குழு ஒன்றை கர்நாடக மாநில அரசு நியமித்தது. அந்த குழு அது தொடர்பான அறிக்கையை கர்நாடக மாநில அரசிடம் தாக்கல் செய்துள்ளது.

    சசிகலா சிறைக்குள் தனக்கு தேவையான வசதிகளை பெற ரூ.2 கோடி வரை லஞ்சமாக கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் கர்நாடக மாநில சிறைத்துறை உயர் அதிகாரிகள் சிலர் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு கர்நாடக மாநில உள்துறை மந்திரி ராமலிங்கரெட்டி பெங்களூர் பரப்பன அக்ர ஹார சிறைக்கு சென்று ஆய்வு செய்தார். கைதிகளிடம் குறை கேட்ட அவர் சசிகலாவிடமும் நலம் விசாரித்தார்.

    இதன் தொடர்ச்சியாக நேற்றிரவு பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் போலீசார் திடீர் அதிரடி சோதனையை நடத்தினார்கள். சிறைத்துறை வட்டாரத்தில் இந்த திடீர் சோதனை அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


    பெங்களூர் நகர போலீஸ் கமி‌ஷனர் சுனீல்குமார் உத்தரவின் பேரில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. இதற்காக தனிப்படை உருவாக்கப்பட்டது. நேற்று காலை முதலே அந்த தனிப்படை போலீசார் தயார் நிலையில் இருந்தனர்.

    நேற்றிரவு பெங்களூர் வடகிழக்கு போலீஸ் துணைக் கமி‌ஷனர் போரலிங்கைய்யா தலைமையில் சுமார் 160 போலீசார் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறைக்குள் புகுந்தனர். அவர்கள் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகளில் சோதனை நடத்தினார்கள். ஒவ்வொரு அறையாக அவர்கள் சல்லடை போட்டு இந்த சோதனையை மேற்கொண்டனர்.

    பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகளில் சோதனை நடத்துவதற்கு பெண் போலீசார் உடன் சென்றிருந்தனர். அவர் பெண் கைதிகளிடம் சோதனையிட்டனர்.

    சசிகலா அடைக்கப்பட்டுள்ள அறையிலும் போலீசார் சோதனை நடத்தியதாக தெரியவந்துள்ளது. இந்த திடீர் சோதனையால் சசிகலாவும் அவருடன் சிறையில் இருக்கும் இளவரசியும் கடும் அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.

    சுமார் 1½ மணி நேரம் இந்த சோதனை நீட்டித்தது. இந்த சோதனையின்போது கைதிகள் பதுக்கி வைத்திருந்த கஞ்சா பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டன.

    சில கைதிகள் விதியை மீறி கொண்டு வரப்பட்ட உணவு பொருட்கள், சீட்டுக்கட்டுகள் வைத்திருந்தனர். அவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தாதா போல செயல்படும் கைதிகளிடம் இருந்து செல்போன் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக அந்த கைதிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    பெங்களூர் மத்திய சிறையில் சோதனை நடந்த அதே நேரத்தில் மைசூரில் உள்ள மத்திய சிறையிலும் போலீசார் அதிரடி சோதனையை நடத்தினார்கள்.

    Next Story
    ×