search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மராட்டியத்தில் நதிகளை பாதுகாக்க 50 கோடி மரங்கள் நடும் திட்டம்: கவர்னர் மாளிகையில் இன்று தொடக்க விழா
    X

    மராட்டியத்தில் நதிகளை பாதுகாக்க 50 கோடி மரங்கள் நடும் திட்டம்: கவர்னர் மாளிகையில் இன்று தொடக்க விழா

    மராட்டியத்தில் நதிகளை பாதுகாக்கும் நடவடிக்கையாக 50 கோடி மரங்கள் நடப்படுகிறது. இதன் தொடக்க விழா இன்று கவர்னர் மாளிகையில் நடக்கிறது.
    மும்பை:

    மராட்டியம் முழுவதும் பசுமையை பேணி காப்பதற்காக வருகிற 2019-ம் ஆண்டுக்குள் 50 கோடி மரங்களை நட மாநில அரசு முடிவு செய்தது.

    இதையொட்டி, கடந்த ஜூலை 1-ந் தேதி மரம்நடும் விழா தொடங்கியது. அப்போது, மாநிலம் முழுவதும் 5 கோடியே 43 லட்சம் மரங்கள் நடப்பட்டன. மேலும், நதியை பாதுகாக்கும் திட்டத்தின் ஒருபகுதியாக ஆற்றோரங்களில் மரங்களை நடுவதற்காக மராட்டிய அரசுக்கும், ஈஷா அறக்கட்டளைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

    இந்நிலையில், மரம்நடும் திட்டத்துக்கு உத்வேகம் அளித்து, 50 கோடி மரங்களை நடும் இலக்கை அடையும் பொருட்டு, மும்பை ராஜ்பவனில் பிரமாண்டமான நிகழ்ச்சி நடத்த மாநில அரசு முடிவு செய்தது. அதன்படி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) கவர்னர் மாளிகையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதில், கவர்னர் வித்யாசாகர் ராவ், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி மந்திரி பங்கஜா முண்டே, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் மற்றும் ஈஷா அறக்கட்டளையை சேர்ந்த சத்குரு ஜக்கி ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் மரம் நடும் திட்டம் மற்றும் விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கி வைக்கப்படுகிறது.

    இதுகுறித்து வனத்துறை மந்திரி சுதீர் முங்கண்டிவார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நதிகள் பாதுகாப்பு மற்றும் மரம்நடும் திட்டத்தில் பொதுமக்கள் அதிகளவில் பங்கேற்பதை ஊக்குவிக்கும் வகையில், கவர்னர் மாளிகையில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. காடுகள் மற்றும் ஆறுகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், சுற்றுச்சூழலை பேண வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் இந்த நிகழ்ச்சி சாதகமான செய்தியை மக்களிடையே கொண்டு செல்லும்.

    இந்த நிகழ்ச்சியின்போது மண் சிற்ப கலைஞர்கள் காடுகள் மற்றும் மரம்நடுவதற்கான அவசியங்களை வலியுறுத்தி தாங்கள் படைத்த படைப்புகளை சமர்ப்பிப்பார்கள். மேலும், இதில் பங்கேற்கும் ஒவ்வொரு நபரும் ‘மரம் நடுவோம்; தேசத்தின் மிகப்பெரிய சொத்தை காப்போம்’ என்று உறுதிமொழி ஏற்பர்.

    இவ்வாறு சுதீர் முங்கண்டிவார் தெரிவித்தார்.

    ஈஷா அறக்கட்டளை சார்பில் தமிழகத்திலும் நதிகளை மீட்போம் விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் மரம் நடும் திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×